அஜீத்தின் 55வது படம் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது!- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: அஜீத்தின் 55வது படத்துக்கான அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் வரும் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது.

ஏ எம் ரத்னம்
வீரம் படத்துக்குப் பிறகு அஜீத் நடிக்கும் புதிய படத்தை ஏஎம் ரத்னம் தயாரிக்கிறார். கடந்த ஆண்டுதான் அஜீத்தை வைத்து ஆரம்பம் படத்தைத் தயாரித்தார் ரத்னம். அவருக்கே மீண்டும் தேடிப் போய் வாய்ப்பை வழங்கினார் அஜீத்.

கவுதம் மேனன்
இந்தப் படத்தை இயக்கும் பொறுப்பை கவுதம் மேனுக்கு அளித்துள்ளார். ஏற்கெனவே ஒரு முறை இருவரும் இணைந்து படம் தயாரிப்பதாக இருந்து, பின்னர் திடீரென விலகினார்கள். இப்போது தானே கவுதம் மேனனை அழைத்து படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்துள்ளார் அஜீத்.

ஏப்ரல் 9-ம் தேதி
இந்தப் படம் அடுத்த வாரம், 9-ம் தேதி புதன்கிழமை சென்னையில் தொடங்குகிறது. தொடர்ந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கிறது.

இந்த ஆண்டின் படம்
இந்தப் படத்தை புராஜெக்ட் ஆப் தி இயர் என்று வர்ணித்துள்ளார் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம். பிரமாண்ட பட்ஜெட், ஸ்டைலிஷ் மேக்கிங் என இதுவரை வந்த அஜீத் படங்களிலிருந்து ரொம்பவே வித்தியாசமாக இருக்கும் இந்தப் படம் என தயாரிப்பாளர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

55வது படம்
இது அஜீத் நடிக்கும் 55வது படம். படத்தின் நாயகி, இசையமைப்பாளர் பற்றி பல்வேறு தகவல்கள் அடிபடுகின்றன. ஆனால் அதையெல்லாம் தயாரிப்பாளர் உறுதிப்படுத்தவில்லை. ஏப்ரல் 9-ம் தேதி வரை பொறுத்திருக்கச் சொல்கிறார்கள்!


Click it and Unblock the Notifications











