அஜீத்தின் புனே- சென்னை பைக் ரேஸ்... மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பயணம்!
சென்னை: வாகன ஓட்டிகளுக்கு விழிபப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புனேயிலிருந்து சென்னை வரை தனது பைக்கிலேயே பயணம் செய்தார் நடிகர் அஜீத்.
நடிகராவதற்கு முன்பே பைக் ரேஸ் வீரராக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் அஜீத். நடிகரான பின்னும் ரேஸை விடாமல் தொடர்ந்தார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார்.
பின்னர், தொழில்முறையிலான ரேஸ்களில் பங்கேற்பதை சமீபத்தில்தான் நிறுத்தினார்.
ஆனால் பைக்கில் பயணம் செய்வதை மட்டும் தொடர்கிறார்.

சென்னை - பெங்களூர்
ஏற்கெனவே கடந்த மாதம் சென்னையிலிருந்து ஆத்தூர் வழியாக பெங்களூருக்கு தனது புதிய பைக்கில் பயணம் செய்து, ஹெல்மட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தினார் அஜீத். இந்தப் பயணத்தின்போது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மும்பை - புனே
சில தினங்களுக்கு முன் மும்பையில் ஷூட்டிங்கிலிருந்த அஜீத், அங்கிருந்து புனேவுக்கு தன் பைக்கில் பயணம் செய்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பைக் பயணத்தை மேற்கொள்ள முடிவெடுத்தார். இது சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்தார்.

புனே - சென்னை
இந்த முறை புனேயிலிருந்து சென்னைக்கு மிக நீண்ட பயணத்தை பைக்கில் மேற்கொண்டார். அவருடன் உதவியாளர்கள் மற்றும் மருத்துவ உதவிக் குழுவும் பயணம் செய்தது. ஹெல்மட் அணியும் அவசியம், சாலை விதிகளை மீறாமல் ஓட்ட வேண்டியது குறித்த விழிப்புணர்வுக்காகவே இந்தப் பயணம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

1300 கி மீ
மொத்தம் 1300 கிமீ தூரத்தை தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 19 மணி நேரத்தில் கடந்தார் அஜீத். இந்த பயணம் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறாத அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது.

தாபாக்களில் உணவு
இந்தப் பயணத்தின் போது தனக்கென பிரத்தியேக உணவு எதையும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை. வழியில் இருந்த தாபாக்களில் கிடைத்த உணவை விரும்பி உண்டார்.

ஒரு தியானம் மாதிரி
இந்த சாலைப் பயணம் அஜீத்துக்கு மிகவும் பிடித்திருந்ததாம். 'இது ஒரு தியானம் மாதிரிதான் எனக்குத் தெரிகிறது. யோசிக்க நிறைய நேரம் கிடைக்கிறது," என தன்னுடன் வந்தவர்களிடம் கூறினாராம் அஜீத்.
எதற்கும் கவனமா இருங்க.. அடுத்தவாட்டி, சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில் உங்களுடன் பயணம் செய்யும் பைக் பார்ட்டி அநேகமாக நம்ம தலயாகக் கூட இருக்கலாம்!


Click it and Unblock the Notifications











