கொள்கையை மாற்றிய அஜித்?.. விளம்பரத்தில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா?.. ஆத்தாடி
சென்னை: அஜித்குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். விரைவில் அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று தெரிகிறது. அநேகமாக ஸ்ரீலீலாதான் இதில் ஹீரோயினாக நடிப்பார் என்றும்; சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. சூழல் இப்படி இருக்க அஜித் விளம்பர படத்தில் நடிக்க கமிட்டாகியிருப்பதாகவும்; அதற்காக அவரின் சம்பளம் குறித்தும் தகவல் ஒன்று வட்டமடிக்கிறது.
குட் பேட் அக்லி, விடாமுயற்சி என இரண்டு படங்களில் கடந்த வருடம் நடித்தார் அஜித். கார் ரேஸில் முழு கவனத்தையும் செலுத்தியதால் ஒரே வருடத்தில் இரண்டு படங்களில் நடித்து முடித்தார். ஏகேவை பொறுத்தவரை கடந்த பல வருடங்களாகவே ஒரு வருடத்துக்கு ஒரு படம் நடிப்பதே பெரிய விஷயம்; அவரோ ஒரே வருடத்தில் இரண்டு படங்களில் நடித்ததை நினைத்து அனைவருமே ஆச்சரியப்பட்டார்கள். இரண்டு படங்களுமே சுமார் ரகம்தான் என்ற விமர்சனத்தையும் பெற்றிருந்தன.

அடுத்த படம்: அடுத்ததாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆதிக்கின் ஒர்க்கிங் ஸ்டைல் ஏகேவுக்கு பிடித்துவிட்டதால் சிறுத்தை சிவா, ஹெச். வினோத் வரிசையில் ஆதிக்கையும் தன் குட் புக்கில் இடம் பெற வைத்து; தொடர்ச்சியாக அவருடன் படங்கள் செய்ய பிளான் செய்திருப்பதாகவும் கோடம்பாக்க பறவைகள் சொல்கின்றன. அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்தின் கொள்கை: இதற்கிடையே அஜித்துக்கென்று தனி கொள்கைகள் இருக்கின்றன. இசை வெளியீட்டு விழாவுக்கு நோ, படங்களின் ப்ரோமோஷன்களுக்கு நோ, பேட்டிகளுக்கு நோ, விளம்பர படங்களுக்கு நோ என தன்னை சுற்றி ஒரு வட்டத்தை போட்டு வைத்திருந்தார். ஆனால் ரேஸில் கவனம் செலுத்துவதிலிருந்து அவர் அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆங்கில ஊடகங்களுக்கு தொடர்ச்சியாக சில பேட்டிகளை கொடுத்தார். அந்தப் பேட்டிகள் அனைத்துமே ஆழமானதாகவும், அற்புதமானதாகவும் இருந்தன.
விளம்பர படத்தில் நடித்த அஜித்: அதேபோல் கேம்ப்பா கோலா குளிர் பான விளம்பர படத்திலும் அண்மையில் நடித்தார். அதை பார்த்த அனைவருமே, 'நம்ம ஏகேவா இப்படி?. தன்னுடைய கொள்கை அனைத்தையும் மாற்றியிருக்கிறாரே' என ஆச்சரியம்தான் பட்டார்கள். ஏகேவோ வழக்கம்போல் அமைதியாக தனது வேலைகளையும், குடும்பத்தையும் கவனித்துவருகிறார். இந்நிலையில் மேற்கொண்டு இன்னொரு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக புதிய தகவல் ஒன்று இணையத்தில் பரவிவருகிறது.
என்ன தகவல்?: அதாவது கட்டுமான நிறுவனம் ஒன்றின் விளம்பர படத்தில் நடிக்க அஜித் கமிட்டாகியிருக்கிறாராம். அந்த விளம்பர படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய்தான் இயக்குகிறாராம். ஏற்கனவே அஜித்தின் கார் ரேஸ் தொடர்பான ஆவண படம் கிளாடியேட்டர்ஸ் என்கிற பெயரில் உருவாகியிருக்கிறது. அதனையும் விஜய்யே இயக்கியிருக்கிறார். இந்நிலையில் கட்டுமான நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடிப்பதற்கு அஜித்தின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு 25 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டிருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications
