Ajith - அஜித் நடிக்க வேண்டிய படம் அது.. கடைசியில் விக்ரம் நடித்து மெகா ஹிட்.. இதையும் மிஸ் பண்ணீங்களா ஏகே?
சென்னை: Ajithkumar (அஜித்குமார்) அஜித் நடிக்க வேண்டிய படத்தில் விக்ரம் நடித்து அந்தப் படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது.
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவர் அஜித்குமார். யாரின் துணையும் இல்லாமல் திறமையின் துணையோடு திரையுலகத்துக்குள் நுழைந்த அவர் தன்னம்பிக்கையோடு போராடியவர். பல தோல்வி படங்களை கொடுத்தாலும் ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் கற்றுகொண்டு அதிலிருந்து மீண்டார். அதனாலேயே அவருக்கு ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்.
மன்றம் கலைப்பு: குறிப்பாக எந்த நடிகரும் செய்ய துணியாததை அஜித் செய்தார். அதாவது தனது ரசிகர் மன்றங்களை அவர் கலைத்தபோது கண்டிப்பாக இது அஜித்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் என பலரும் கூறினார்கள். ஆனால் மன்றம் கலைத்த பிறகு வெளியான மங்காத்தா படம் மிகப்பெரிய ஓபனிங்கை பெற்றது குறிப்பிடத்தக்கது. அது ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சரியப்படுத்தியது.
துணிவு: அவரது நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. ஹெச்.வினோத் இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதிலும் போட்டியாக களமிறங்கிய வாரிசு படத்தை காலி செய்ததால் ஏகே ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அஜித்தும் அதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவே கூறப்படுகிறது.

விடாமுயற்சி: துணிவு படத்தை முடித்திருக்கும் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தை லைகா தயாரிக்க மகிழ் திருமேனி இயக்குகிறார். த்ரிஷா, ப்ரியா பவானி ஷங்கர், சஞ்சய் தத், ஆரவ் உள்ளிட்டோர் அஜித்துடன் நடிப்பதாக கூறப்படுகிறது. அஜர்பைஜானில் ஷூட்டிங் தொடங்கி நடந்தது. தற்போது சென்னையில் நடக்கலாம் என கருதப்படுகிறது.
விட்ட படங்கள்: இந்த சூழலில் அஜித் முதலில் நடிப்பதாக இருந்து பின்னர் வெளியேறிய படங்கள் குறித்த பேச்சு சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக தென்படுகிறது. பாலா இயக்கத்தில் வெளியான நந்தா, நான் கடவுள், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கஜினி போன்ற படங்களில் முதலில் அஜித்தான் நடிப்பதாக இருந்தது. இந்த சூழலில் அவர் நடிப்பதாக இருந்த மற்றொரு படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ஏறுமுகம் டூ ஜெமினி: அதன்படி சரண் இயக்கத்தில் ஏறுமுகம் என்ற படத்தில் அவர் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் அந்தக் கதையை எழுதுவதற்கு சரண் நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டதாகவும் அதனால் அந்தப் படத்திலிருந்து அஜித் வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. பிறகு அந்தப் படம்தான் ஏவிஎம் தயாரிப்பில் சரண் இயக்கி விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படம்.
அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி விக்ரம் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனை பார்த்த ரசிகர்கள் அய்யய்யோ இந்தப் படத்தையும் ஏகே மிஸ் செய்திருக்கிறாரா என கவலையடைந்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











