சின்ன குழந்தையாகவே மாறிட்டாரே.. துபாயில் அஜித் என்ன செய்கிறார் பாருங்க
சென்னை: அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருந்தது. ஆனால் திடீரென ரிலீஸ் தள்ளி போயிருக்கிறது. அதேபோல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அஜித் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித்குமார். கடந்த வருடம் மே மாதம் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு ஷூட்டிங் ரொம்பவே ஸ்லோவாக நடந்தது. இடையில் ஒளிப்பதிவாளர் மாற்றம்; கலை இயக்குநர் மிலன் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மரணம்; லைகாவுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி என படம் பற்றி நெகட்டிவ் விமர்சனங்களே வந்துகொண்டிருந்தன. ஒருகட்டத்தில் இந்தப் படம் ட்ராப் செய்யப்பட்டுவிட்டதாகவெல்லாம் தகவல்கள் வட்டமடிக்க ஆரம்பித்தன.

உச்சக்கட்ட அப்செட்: இதன் காரணமாக அஜித்தின் ரசிகர்கள் உச்சக்கட்ட அப்செட்டாகினர். முக்கியமாக மகிழ் திருமேனி - அஜித்தின் காம்போவை பார்க்கவே முடியாதா என்றும் ஏங்கினார்கள். படம் மேலும் மேலும் தாமதம் ஆனதால் இனி விடாமுயற்சிக்கு வாய்ப்பே இல்லை என்றெல்லாம் தங்களுக்குள் பேச ஆரம்பித்தார்கள். அந்தப் பேச்சுக்கு பலம் சேர்க்கும் விதமாக குட் பேட் அக்லி ஷூட்டிங்கிலும் அஜித் கலந்துகொண்டார்.
படு பிஸியான அஜித்: ஆனால் விடாமுயற்சி படம் ட்ராப் எல்லாம் ஆகவில்லை. கண்டிப்பாக ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவும் அதை உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் படத்தில் நடித்தவர்களின் கேரக்டர் லுக்குகளும் வெளியாகின. இதன் காரணமாக உற்சாகத்தை இழந்திருந்த ரசிகர்கள் மீண்டும் உற்சாகமடைந்தனர். அஜித்தும் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களின் ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டு மாறி மாறி நடித்தார்.
தள்ளிப்போன ரிலீஸ்: அஜித் ரசிகர்களுக்கு மேலும் உச்சக்கட்ட மகிழ்ச்சியாக விடாமுயற்சி படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது. டயலாக்குகள் எதுவும் இல்லாமல் விஷுவல்களிலேயே மகிழ் திருமேனி டீசரை செதுக்கியிருந்தார். இதனையடுத்து படமானது ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போயிருக்கிறது. இதற்கிடையே ஏப்ரல் 10ஆம் தேதி குட் பேட் அக்லி ரிலீஸாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
அஜித்தின் வீடியோ: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார் ஏகே. கொண்டாட்டத்தை முடித்துவிட்டு தனது குடும்பத்தினை இந்தியாவுக்கு அனுப்பி வைத்த அவர்; சிங்கப்பூரிலிருந்து துபாய்க்கு சென்றார். அங்கு அவர் ரேஸிங் பயிற்சியில் ஈடுபடவிருக்கிறார். இந்நிலையில் புதிய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதில் தனது சகாக்களுடன் சிறுவர்கள் ஓட்டும் பைக்கை ஓட்டும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள் அட நம்ம ஏகே குழந்தையாவே மாறிட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











