அக்ஷய் குமாருக்கு என்ன நடந்தது?.. குடும்பத்தோடு சென்றபோது விபத்து.. இரண்டு பேர் காயம்
மும்பை: பாலிவுட்டின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். நடிகை ட்விங்கிள் கண்ணாவை திருமணம் செய்திருக்கும் அவருக்கு ஆரவ் என்ற மகன் இருக்கிறார். இப்போதும் பிஸியாக நடித்துவரும் அவர்; தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தார். சுற்றுலாவை முடித்து மும்பை விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு சென்றபோது அவரது பாதுகாப்புக்கு வந்த கார் விபத்தில் சிக்கியது.
பாலிவுட்டில் கடந்த பல ஆண்டுகளாக டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் அக்ஷய் குமார். 90களில் நடிக்க வந்த அவர் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். ஷாருக்கான், அமீர் கான் என கான் நடிகர்களுக்கு போட்டியாக தனக்கென தனி மார்க்கெட்டை பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். நடிகை ட்விங்கிள் கண்ணாவை திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.மகனை பொறுத்தவரை அவருக்கு சினிமாவில் ஆர்வம் இல்லை என்றே தெரிகிறது.
அக்ஷய் இப்போதும் பிஸி: இப்போதும் பிஸியாக நடித்துவருகிறார் அக்ஷய் குமார். கடைசியாக அவர் Jolly LLB 3 திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அடுத்ததாக பூத் பங்களா, வெல்கம் டூ தி ஜங்கிள், ஹைவான் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இவை அனைத்தும் அநேகமாக இந்த வருடத்திலேயே ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு வயது இப்போது 58 வயது ஆகும்.

தென்னிந்திய மொழிகளில்: இதற்கிடையே தென்னிந்திய மொழிகளில் அக்ஷய் பெரிதாக நடிக்கவில்லை. ரஜினி ஹீரோவாக நடித்த 2.0 திரைப்படத்தில் வில்லனாக நடித்த அவர்; கண்ணப்பா படத்தில் கெஸ்ட் ரோல் செய்திருந்தார். பெரிதா இங்கே நடிக்கவில்லை என்றாலும்; தென்னிந்திய மொழி திரைப்படங்களை ரீமேக் செய்து நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார். சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில்கூட அவர் நடித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
மும்பையில் ஏற்பட்ட விபத்து: இந்நிலையில் அக்ஷய் குமார் தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தார். சுற்றுலாவை முடித்துவிட்டு நேற்று மும்பைக்கு திரும்பினார். மும்பை விமான நிலையத்திலிருந்து தனது வீடு இருக்கும் ஜூஹு பகுதிக்கு சென்றார். அப்போது அவருக்கு பாதுகாப்புக்கு இன்னும் சில வாகனங்களும் வந்தன. ஜூஹு பகுதியில் உள்ள சில்வர் பீச் கஃபே அருகே சென்றபோது முன்னே சென்றுகொண்டிருந்த ஆட்டோ மீது பாதுகாப்புக்கு வந்த வாகனங்களில் ஒன்று மோதியதாக கூறப்படுகிறது.
இரண்டு பேர் காயம்: அதில் இரண்டு பேர் காயமடைந்திருப்பதாகவும்; அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்வாய்ப்பாக அக்ஷய் குமாருக்கும், அவரது குடும்பத்துக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. விபத்து குறித்த செய்தியை தெரிந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தார்கள். இந்த விபத்து அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications











