பெண்களுக்காக.. அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் (AAFA) HPV தடுப்பூசி முகாமை தொடங்கியுள்ளது!
ஹைதராபாத்: பெண்களின் உடல்நலன் மற்றும் பொதுச் சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில், அல்லு அர்ஜுன் ரசிகர்கள் சங்கம் (AAFA) HPV தடுப்பூசி முகாமைத் தொடங்கியுள்ளது. இது நடிகர் அல்லு அர்ஜுனின் "ஒவ்வொரு ஆண்டும் ஒரு நல்ல செயல்" என்ற நோக்கத்தை முன்னெடுத்துச் செல்கிறது.
நடிகர் அல்லு அர்ஜுனின் வருகிற ஏப்ரல் 8 ஆம் தேதி பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் வாராந்திர கொண்டாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்தக் கொண்டாட்ட வாரத்தை சமூக சேவைக்கான அர்த்தமுள்ள முயற்சியாக மாற்றும் நோக்கில், இந்த HPV தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

பெண்களை அதிகம் தாக்கும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதில் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி இன்றியமையாதது. இதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துவதும், சுகாதாரப் பழக்கங்களை ஊக்குவித்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
"நாளை நம் மகள்களை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து காப்பாற்றவே இன்று ஒரு தடுப்பூசி" என்ற கேப்ஷனுடன் இத்திட்டம், குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் இந்தத் தடுப்பூசி, சுகாதார விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை வலியுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், தடுப்பூசி நடவடிக்கைகளும் நடைபெறும்.
நேர்மறையான சமூக மாற்றத்திற்காகத் தன் செல்வாக்கையும், கூட்டு பலத்தையும் பயன்படுத்த வேண்டும் என்ற அல்லு அர்ஜுனின் எண்ணத்துடன் இம்முயற்சி ஒத்துப்போகிறது. சமூக சேவைக்கான அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த முன்னெடுப்பு பிரதிபலிக்கிறது.


Click it and Unblock the Notifications











