தொடர்ந்து வலுக்கும் பிரச்னை.. ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வைத்த முக்கியமான கோரிக்கை
ஹைதராபாத்: டோலிவுட் மட்டுமின்றி மற்ற மொழி திரையுலகிலும் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருப்பது அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதும்; அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்கள்தான். அல்லுவுக்கு ஆதரவாக தெலுங்கு திரையுலகினர் அணி திரள; அவருக்கு எதிராக தெலங்கானா முதல்வர், காவல் துறை டிஜிபி, ACP உள்ளிட்டோர் இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தனது ரசிகர்களுக்கு எக்ஸ் தளத்தின் மூலம் முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார் அல்லு அர்ஜுன்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான புஷ்பா படம் சமீபத்தில் வெளியானது. பான் இந்தியா அளவில் வெளியான அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. விமர்சன ரீதியாக அப்படி இப்படி இருந்தாலும் வசூல் ரீதியாக படம் சக்கைப்போடு போட்டிருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவருகிறது. இதுவரை உலகளவில் இந்தப் படம் 1500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

வெடித்த பிரச்னை: இப்படி படம் வசூல் வேட்டையாடினாலும் அல்லு அர்ஜுனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஹைதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை காண்பதற்கு அல்லு அர்ஜுனும் சென்றிருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்தப் பெண் மட்டுமின்றி சிறுவர் ஒருவரும் கோமாவுக்கு சென்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விவாதத்தையும் உருவாக்கியது.
அல்லு கைது: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இருந்தாலும் இந்த விஷயத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க அரசியல் அழுத்தம்தான் காரணம் என்றும்; சம்பந்தமே இல்லாமல் அவரை கைது செய்தார்கள் என்று அவரது ரசிகர்கள் கூறினார்கள். மேலும் திரைத்துறையினரும் அல்லு அர்ஜுனின் வீட்டுக்கு படையெடுத்து தங்களது ஆதரவை தெரிவித்தார்கள்.
முதலமைச்சர் கண்டனம்: இதனையடுத்து இதுகுறித்து பேசிய அல்லு அர்ஜுன் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி நடப்பதாக கூறினார். அதனைத் தொடர்ந்து பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “அல்லு அர்ஜுன் சில மணி நேரங்களே சிறையில் இருந்தார். உடனே நடிகர்கள் பலரும் அவரது வீட்டுக்கு சென்று ஆதரவு சொல்கிறார்கள். அவருக்கு அப்படி என்ன ஆகிவிட்டது. கண், கால், கிட்னி என எதுவும் போய்விட்டதா என்ன?.. நெரிசலில் உயிரிழந்த பெண் பற்றியோ,கோமாவில் உள்ள சிறுவனை பற்றியோ யாராவது கவலைப்பட்டார்களா?.. இதன் மூலம் இந்தச் சமூகத்துக்கு திரைத்துறையினர் என்ன சொல்ல வருகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அல்லு அர்ஜுன் ட்வீட்: அதேபோல் தெலங்கானா மாநில டிஜிபி மற்றும் துணை ஆணையரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் தளத்தில், "நான் எனது ரசிகர்களிடம் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். ஆன்லைனிலோ இல்லை ஆஃப் லைனிலோ ரசிகர்கள் யாரும் தங்களது உணர்வுகளை பொறுப்புடன் வெளிப்படுத்த வேண்டும். அசிங்கமான மொழிகளையோ, நடத்தையையோ வெளிப்படுத்த வேண்டாம்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











