பிரபாஸையே பதற வைத்த அல்லு அர்ஜுன்.. 11 நாளில் புஷ்பா 2 அதிகாரப்பூர்வ வசூல்.. வைல்டு ஃபயர்!
சென்னை: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்ட புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை வரை புஷ்பா 2 திரைப்படம் வசூல் செய்த அறிவிப்பை தற்போது அதிகாரப்பூர்வமாக புஷ்பா படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, ஷோபனா, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பிரம்மாண்ட படமான கல்கி 2898 ஏடி திரைப்படம் 1100 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில், அந்த படத்தின் வசூலை இன்னொரு டோலிவுட் படமே இந்த ஆண்டு இறுதியிலேயே முறியடித்துள்ளது.

இந்திய சினிமாவையே டோலிவுட் இந்த 2024ம் ஆண்டு ஆட்சி செய்துள்ளது பாலிவுட் திரையுலகையே பிரம்மிக்க வைத்துள்ளது.
பிரபாஸை பின்னுக்குத்தள்ளிய அல்லு அர்ஜுன்: கல்கி 2898 ஏடி படத்தின் மூலம் இந்த ஆண்டு நம்பர் ஒன் இடத்தை இதுவரை பிரபாஸ் பிடித்திருந்தார். இந்நிலையில், அல்லு அர்ஜுன் 2 வாரங்களில் அந்த இடத்தை தனது புஷ்பா 2 மூலம் பிடித்து விட்டார். ஏகப்பட்ட ஸ்டார் நடிகர்கள் இணைந்து நடித்த கல்கி 2898 ஏடி படத்தின் வசூலை புஷ்பா 2 முறியடிக்கவே வாய்ப்பில்லை என்றும் நெகட்டிவ் விமர்சனங்களால் படம் ஒரு வாரத்தில் சுருண்டு விடும் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில், அல்லு அர்ஜுன் கைதுக்குப் பிறகு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் புஷ்பா 2 படம் பிக்கப் ஆகிவிட்டது.
11 நாள் வசூல்: புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியானது. கடந்த 11 நாட்களில் இதுவரை உலகளவில் 1409 கோடி ரூபாய் வசூலை புஷ்பா 2 படம் பெற்றுள்ளது. இதே வேகத்தில் படம் 20 நாட்கள் ஓடினால், பாகுபலி 2 படத்தின் வசூலுக்கும் வேட்டு வைத்துவிடும் என்கின்றனர். கங்குவா படம் 2000 கோடி வசூல் வரும் என நினைக்கிறோம் என ஞானவேல் சொன்ன நிலையில், அதை பற்றியெல்லாம் பேசாமல் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அந்த சாதனையை படைப்பார்களா என ஒட்டுமொத்த திரையுலகமும் காத்துக் கொண்டிருக்கிறது.
குட் பேட் அக்லி: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அடுத்து அஜித் குமார், த்ரிஷா நடித்து வரும் குட் பேட் அக்லி படமும் வெளியாகவுள்ள நிலையில், புஷ்பா 2 படத்திற்கு செய்தது போலவே புரமோஷன் மற்றும் மார்க்கெட்டிங் செய்தால் அந்த படமும் அடுத்த ஆண்டு மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் படமாக மாறும் என்றும் கூறுகின்றனர். அஜித்தின் உடல் எடை குறைந்த லுக்கை பார்த்தே ரசிகர்கள் ரெடியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாப்பில் டோலிவுட்: சந்தியா தியேட்டரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் ரேவதி எனும் பெண் பரிதாபமாக உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஒரு நாள் இரவு சிறையில் இருந்தார். அடுத்த நாள் வெளியே வந்த அவர் கண்ணாடி அறையில் ஒவ்வொரு பிரபலங்களையும் சந்தித்துக் கொண்டிருந்த நிலையில், தியேட்டர்களிலும் வசூல் வேட்டையை நடத்தியிருக்கிறார். பாலிவுட்டில் இந்த ஆண்டு வெளியான படங்களில் ஸ்ட்ரீ 2 மட்டுமே 700 கோடி வசூல் வேட்டை நடத்தியது. அந்த வசூலை இந்தி பெல்ட்டிலேயே புஷ்பா 2 அள்ளிவிடும் என்கின்றனர். டோலிவுட்டில் இந்த ஆண்டு வெளியான கல்கி 2898 ஏடி மற்றும் புஷ்பா 2 என இரு படங்கள் 1000 கோடி கிளப்பில் இணைந்து ரூல் செய்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











