அமைதிப்படை ரீ ரிலீஸ்.. விஜய் அப்படி செய்தார்.. ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?.. சத்யராஜ் ஓபன் டாக்
சென்னை: மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், கஸ்தூரி, ரஞ்சிதா உள்ளிட்டோர் நடித்த படம் அமைதிப்படை. கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. முக்கியமாக அரசியல் நையாண்டி படங்களிலேயே இந்தப் படம் மாதிரி அவ்வளவு தைரியமாக வேறு எந்தப் படமும் வந்தது இல்லை. இந்நிலையில் இப்படமானது ஏப்ரல் பத்தாம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. அதனையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சத்யராஜ் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பாரதிராஜாவின் உதவி இயக்குநர்களில் ஒருவராக இருந்து இயக்குநராக மாறியவர் மணிவண்ணன். அவர் இயக்கிய படங்கள் பெரும்பாலானவை ஹிட்தான். ஆனாலும் அமைதிப்படை மாதிரி இன்னொரு படம் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பது அனைவரது கருத்தும். அரசியல் நையாண்டி ஜானரில் உருவான அந்தப் படத்தில் அரசியல் குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் தனது திரைக்கதை மற்றும் வசனங்களால் ஓபனாக அடித்து பேசியிருப்பார் இயக்குநர். அதனை சத்யராஜும் தனது பங்குக்கு நடிப்பால் மெருகேற்றியிருப்பார்.

சோழ பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ: அந்தப் படத்தின் அத்தனை சீன்களுமே அனாயசமாக இருக்கும். அதிலும் வாக்கு எண்ணிக்கையின்போது அமாவாசை கேரக்டரிலிருந்து நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏவாக சத்யராஜ் மாறும் ட்ரான்ஸ்பர்மேஷன் சீன் காலத்துக்கும் நிற்கும். அதில் இயக்குநரின் டச், சத்யராஜின் குறும்புத்தனமான நடிப்பு என அதகளமாக இருக்கும். அதேபோல் தேங்காய் பொறுக்கும் சீன், மேடையில் மணிவண்ணன் மைக்கை வைத்து எதிர்க்கட்சிகளை வசைபாடும் சீன் என ஒவ்வொன்றும் புது விதத்தில் இருந்தன. படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.
இரண்டாவது பாகம் தோல்வி: பொதுவாக க்ளாசிக்காகிவிட்ட படத்தை இரண்டாம் பாகம் எடுக்கிறேன் என்று சொல்லி சொதப்புவதுதான் கோலிவுட்டில் அதிகம். அந்த லிஸ்ட்டில் அமைதிப்படைக்கும் இடம் உண்டு. கடந்த 2013ஆம் ஆண்டு மணிவண்ணன் இரண்டாவது பாகத்தை எடுத்தார். ஆனால் அந்தக் காலகட்டத்துக்கு படம் சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை. அதுதான் மணிவண்ணன் இயக்கிய கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாவது பாகம் தோல்வியடைந்தது படக்குழுவுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்குமே சோகம்தான்.
ரீ ரிலீஸாகும் அமைதிப்படை: சூழல் இப்படி இருக்க அமைதிப்படை படத்தின் முதல் பாகம் ஏப்ரல் பத்தாம் தேதி ரீ ரிலீஸாகவிருக்கிறது. இதனையொட்டி நேற்று சென்னையில் நிகழ்ச்சி நடந்தது. அதில் சத்யராஜ், கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அப்போது கஸ்தூரிக்கு சத்யராஜ் அல்வா ஊட்டிவிட்டார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைத்து படங்களையும் 30 நாட்களுக்குள் முடிக்கும் மணிவண்ணன் இந்தப் படத்தை மட்டும் 70 நாட்கள் எடுத்தார். அதிக தொகைக்கு விற்றுவிட்டேன். அதனால் கம்மியான நாட்களில் ஷூட்டிங்கை முடித்தால் எல்லோரும் தப்பாக நினைத்துக்கொள்வார்கள் என்று கூறினார்.
விஜய் சொன்னது: படத்தை பார்த்துவிட்டு சிவாஜி சார் என்னிடம், நீ நடிகன்டா.. வேறு மாதிரி நடிச்சிட்ட என்றார். அதனையடுத்து விஜய், அஜித், விக்ரம் எல்லாம் வளர்ந்துவரும் காலகட்டம். அப்போது எனக்கு ஹீரோவாக இறங்கு முகம். அந்த சமயத்தில் விஜய்யிடம் ஒரு பத்திரிகை பேட்டி எடுத்தது. அப்போது அவர், எனக்கு நடிப்பில் யாரும் இன்ஸ்பிரேஷன் இல்லை. ஆனால் சில டயலாக்குகளை படிக்கையில் இதை சத்யராஜ் சொன்னால் எப்படி இருக்கும் என நினைத்துக்கொள்வேன். முக்கியமாக அமைதிப்படை படத்தில் அமாவாசை மாதிரி ஒரு கேரக்டரை நான் செய்ய வேண்டும் என கூறினார். இறங்கு முகத்தில் இருக்கும் என்னை புகழ்ந்த விஜய்க்கு ஃபோன் செய்து நன்றி தெரிவித்தேன்.
ரஜினி சொன்னது: ரஜினிகாந்த் ஒருமுறை எனக்கு ஃபோன் செய்து அமைதிப்படை படத்தை பார்க்க வேண்டும். உடனே பார்க்க வேண்டும் என சொன்னார். நாங்களும் அவருக்கு திரையிட்டு காண்பித்தோம். அவர் படத்தை பார்த்துவிட்டு எங்களிடம், எப்படி இதை எடுத்தீர்கள். எதுவும் பயமாக இல்லை என கேட்டார். அதற்கு நாங்களோ, எப்படியோ எடுத்துவிட்டோம். யாராவது கேட்டால் நானும், மணிவண்ணனும் மாற்றி மாற்றி பழி போட்டுக்கொள்ள வேண்டியதுதான்" என்றார்.


Click it and Unblock the Notifications















