தனுஷ் அப்படி சொன்னதே இல்லை.. இதுதான் எங்கள் படத்தின் கதை.. சீக்ரெட்டை உடைத்த அமரன் பட இயக்குநர்
சென்னை: அமரன் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் சக்சஸ்ஃபுல் இயக்குநராக மாறியிருக்கும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இப்படம் தனுஷின் 55ஆவது படமாக உருவாகவிருக்கிறது. இப்போது அவர் ஹிந்தி பட ஷூட்டிங்கில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் சூழலில்; தனுஷுடன் இணையவிருக்கும் படத்தின் கதைக்களத்தை குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஒரு நிகழ்ச்சியில் ஓபனாக பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தனுஷ் கடைசியாக தானே இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து தனது சகோதரி மகன் பவிஷை வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கினார். அதில் பவிஷுடன் அனிகா சுரேந்திரன், மாத்யூ தாமஸ், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தனுஷே படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் படத்துக்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிராகனுக்கு முன் எடுபடாத NEEK: பவர் பாண்டிக்கு பிறகு தான் இயக்கிய ராயன் படம் சரியாக போகாததால் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை ரொம்பவே நம்பியிருந்தார் தனுஷ்; ஆனால் போட்டிக்கு களமிறங்கிய டிராகன் விட்ட நெருப்பில் படம் காணாமல் போய்விட்டது. அடுத்ததாக தானே இயக்கி இட்லி கடை என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் அவர். இந்தப் படத்திலாவது தனுஷ் இயக்குநராக தப்பிப்பாரா இல்லை சிக்கிக்கொள்வாரா என்ற சந்தேகம் அவரது ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.
தற்போதைய படம்: இதற்கிடையே தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்திருக்கிறார் அவர். மேலும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு ஹிந்தி படத்திலும் நடித்துவருகிறார். கண்டிப்பாக இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாகும் என்கிற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. அதேபோல் அமரன் திரைப்படம் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார். அமரன் படம் மெகா ஹிட்டானதால் ராஜ்குமாருடன் இணையும் படத்தின் மீதும் தனுஷுக்கு ரொம்பவே நம்பிக்கை இருக்கிறது.
ராஜ்குமார் பெரியசாமி பேட்டி: இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராஜ்குமார் பெரியசாமி; தனுஷுடன் இணையும் படம் குறித்து பேசுகையில், "என்னுடைய அடுத்த படத்தில் பெரிய நடிகர் (தனுஷ்) இணைந்திருக்கிறார். அவரது நடிப்புக்கு தீனி போடும் விதமாக இந்தப் படம் இருக்கும். அதேசமயம் இந்தப் படத்தின் கதை அவருக்காக தயார் செய்யப்பட்டது இல்லை. அவர் எனக்கு மிகப்பெரிய சுதந்திரத்தை கொடுத்தார் என்பதுதான் உண்மை. எந்தக் கதையாக இருந்தாலும் நடிப்பதற்கு தயார் என்றே அவர் கூறினார்.
உண்மை சம்பவம்: அவர் எனக்கு எந்த கண்டிஷனையும் போடவில்லை. பெரிய கம்ஃபோர் ஸோன் ஒன்றை கொடுத்திருந்தார். அது முதல் சந்திப்பிலேயே நடந்தது. பிறகு நான் இரண்டு கதைகளை உருவாக்கினேன். இரண்டாவது சந்திப்பின்போது அந்த இரண்டு கதைகளையும் நான் கூறினேன். இரண்டுமே அவருக்கு பிடித்திருந்தது. அதனைத் தொடர்ந்து அந்த இரண்டிலிருந்து ஒரு கதையை தேர்ந்தெடுத்தார். அது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை" என்றார். ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் படமும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி மெகா ஹிட்டானது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











