அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்புகிறார் அமிதாப்

மும்பையில் உள்ள செவன்ஹில்ஸ் மருத்துவமனையில் அமிதாப்பச்சனுக்கு அடிவயிற்றில் இரண்டு பக்கங்களிலும் சனிக்கிழமையன்று அறுவைசிகிச்சை நடைபெற்றது. 5 மணி நேரம் வரை நீடித்த இந்த அறுவைசிகிச்சை மிகவும் வெற்றிகரமாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து அமிதாப்பச்சன் உடல்நிலை வேகமாக தேறியது. எனினும் அவருக்கு எந்த மாதிரியான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது பற்றி மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிடவில்லை.
அதேசமயம், அமிதாப்பச்சன் உடல்நிலை தேறி வருவதாகவும், அவர் இன்று வீட்டிற்கு அனுப்பப்படுவார் என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அமிதாப் நன்றி
இதற்கிடையே, தான் விரைவில் குணம் அடைய வேண்டி பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு, அமிதாப்பச்சன் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
"உங்களுடைய அன்பும், வாழ்த்துக்களும் ஒருபோதும் தோற்றது கிடையாது. இதற்காக பட்ட கடனை, நான் ஒருபோதும் திருப்பி செலுத்த முடியாது. நீங்கள் அனைவரும் விந்தையானவர்கள். உங்களுக்கு நன்றி' என்று அவர் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருக்கிறார்.
கடந்த 1982 ம் ஆண்டு கூலி' படத்தின் படப்பிடிப்பில் ஒரு சண்டைக் காட்சியில் நடித்தபோது அமிதாப்பச்சனுக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவருக்கு அடிவயிற்றில் குடல் பகுதியில் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
அறுவை சிகிச்சை செய்து கொண்ட அமிதாப்பச்சனை சஞ்சய்தத் உள்ளிட்ட இந்தி திரையுலகத்தினர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.


Click it and Unblock the Notifications











