ரஜினி எது பேசினாலும் அது ‘பஞ்ச்’ தான்... கே.எஸ்.ரவிக்குமார்
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினி எது பேசினாலும் அது பஞ்ச் வசனங்கள் தான் என விளக்கமளித்துள்ளார் லிங்கா பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
கோச்சடையான் படத்தைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் லிங்கா படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினியுடன் அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா இணைந்து நடிக்கும் காட்சிகள் எடுக்கப்படுகின்றன. 40 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடக்கிறது.
இந்நிலையில், லிங்கா படத்தில் ரஜினிக்கு பஞ்ச் வசனங்களே இல்லையென கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காரணம் தனது ஆரம்பகால படங்கள் முதல் ரஜினி தன் படங்களில் பேசும் பஞ்ச் வசனங்கள் ரசிகர்களிடையே பெருத்த ஆதரவைப் பெற்றவை.

பிரபல பஞ்ச் வசனங்கள்....
16 வயதிலே படத்தில் வரும் ‘இது எப்படி இருக்கு', முரட்டுகாளையில் வரும் ‘சீவிடுவேன்' அருணாசலம் படத்தில் வரும் ‘ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்றான்', அண்ணாமலையில் வரும் ‘நான் சொல்றததான் செய்வேன்', படையப்பாவில் வரும் ‘என் வழி தனி வழி', பாட்ஷாவில் வரும் ‘நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி' உள்ளிட்ட வசனங்கள் பரபரப்பாக பேசப்பட்டன.

விளக்கம்...
இந்நிலையில், தனது புதிய படத்தில் ரஜினி பஞ்ச் வசனம் எதுவும் பேசவில்லை என்ற தகவல் ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. எனவே, அது தொடர்பான விளக்கமொன்றை அளித்துள்ளார் லிங்கா பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.

திரும்பத் திரும்ப...
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘லிங்கா' படத்தில் ரஜினிக்கு ‘பஞ்ச்' வசனங்கள் இருக்கும். ஆனால் திரும்ப திரும்ப பேசுவது போல் அந்த ‘பஞ்ச்' வசனம் இருக்காது.

எல்லாமே பஞ்ச் தான்...
ரஜினி என்ன பேசுகிறாரோ அது எல்லாமே பஞ்ச் வசனங்கள்தான்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











