விஷால் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்புக்குட்டி.. விமர்சனங்களை கட்டுப்படுத்தினால் ஆபத்தாம்!
சென்னை: 4 கோடி ரூபாய் வைத்துக் கொண்டு எல்லாம் படம் பண்ண வரவேண்டாம் என நடிகர் விஷால் சில ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. தமிழ் சினிமாவில் வருடத்துக்கு 300க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. அதில், சிறு பட்ஜெட் படங்கள் தான் 90 சதவீதம். இந்நிலையில், சமீபத்தில், 3 நாட்களுக்கு தியேட்டர்களில் விமர்சனமே எடுக்கக் கூடாது என விஷால் சமீபத்தில் சொன்ன கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நடிகர் அப்புக்குட்டி.
மறுமலர்ச்சி, சொலல் மறந்த கதை, கில்லி என பல படங்களில் அட்மாஸ்பியர் நடிகராக நடித்து வந்த அப்புக்குட்டி வெண்ணிலா கபடி குழு படத்தில் அப்புக்குட்டி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். 2011ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்து சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார்.

அஜித்தின் வீரம், வேதாளம் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராகவே நடித்தார். யோகி பாபுவுக்கும் முன்னதாக டாப் காமெடியனாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அப்புக்குட்டி தொடர்ந்து சிறு பட்ஜெட் படங்களிலேயே நடித்து வருகிறார்.
பப்ளிக் ரிவ்யூவுக்கு விஷால் எதிர்ப்பு: கங்குவா படத்துக்குப் பிறகே தியேட்டர்களில் பப்ளிக் விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என தியேட்டர் ஓனர்கள் ஒன்று திரண்டனர். ஆனால், அதன் பின்னர் வெளியான சிறு பட்ஜெட் படங்களின் வெற்றிக்கு பப்ளிக் விமர்சனங்கள் ரொம்பவே கை கொடுத்த நிலையில், மீண்டும் தியேட்டருக்குள் மைக் மற்றும் கேமராவை வைக்க அனுமதித்தனர். ஆனால், இந்த ஆண்டு மீண்டும் தமிழ் சினிமாவில் சுமாரான படங்கள் வெளியாகி வரும் நிலையில், படம் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என சமீபத்தில் நடைபெற்ற ரெட் ஃபிளவர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் பேசியிருந்தார்.

அப்புக்குட்டி சொன்ன விஷயம்: விஷாலின் கருத்தை எல்லாம் ஏற்க முடியாது என்றும் பெரிய பட்ஜெட் படங்கள் பப்ளிசிட்டிக்கே பெரிய தொகையை செலவு செய்வதால், அனைவருக்கும் அந்த படங்கள் வெளியாவது தெரியும். ஆனால், யாதும் அறியான் போன்ற சிறு பட்ஜெட் படங்கள் குறித்து பத்திரிகையாளர்கள் மற்றும் யூடியூபர்கள் விமர்சனம் சொன்னால் தான் நாலு பேருக்கு படம் வெளியாகி இருப்பதே தெரிய வரும், தியேட்டருக்கு வந்து பார்ப்பாங்க. மேலும், பொதுமக்கள் விமர்சனத்தையே தடை செய்வது என்பதெல்லாம் சரியான அணுகுமுறை அல்ல என அப்புக்குட்டி பேசியுள்ளார்.
பிரசாந்த் ரங்கசாமி விளாசல்: முன்னதாக விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி, சினிமா நடிகர்கள் மட்டுமே கஷ்டப்பட்டு உழைப்பதாகவும், மற்ற துறையினர் எல்லாம் கஷ்டமே படுவதில்லையா? என்கிற கேள்வியை எழுப்பி விஷாலை விளாசி இருந்தார். எந்தவொரு படமும் விமர்சனங்களால் கெட்டுப்போக வாய்ப்பே இல்லை என்றும் நல்லா இல்லாத படங்களை பார்க்க வராதீங்கன்னு சொல்வதற்கு காரணமே மக்களோட காசை மிச்சப்படுத்தத்தான். இவங்க குப்பை படத்தை எல்லாம் சூப்பர் என புரமோஷன் செய்து மக்களின் பணத்தை முதல் நாளே சுருட்டிக் கொள்ள செய்வது எல்லாம் அயோக்கியத்தனம் என்றும் நல்ல படங்களை எடுப்பவர்களுக்கு விமர்சனங்கள் எல்லாம் பிரச்சனையே கிடையாது என்றும் நெத்தியடி அடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











