கனத்த இதயத்துடன் எழுதிக்கொள்கிறேன்.. பாலாவுக்கு அருண் விஜய் எழுதிய கடிதம்
சென்னை: பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் வணங்கான் படத்தில் அருண் விஜய் நடித்திருக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த சூழலில் சமீபத்தில் அருண் விஜய் படத்தை பார்த்திருக்கிறார். இந்தச் சூழலில் படம் பார்த்த அருண் விஜய் உச்சக்கட்டமாக நெகிழ்ந்துபோய் பாலாவுக்கு கடிதமும் எழுதியிருக்கிறார்.
பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் வணங்கான் படத்தில் முதலில் சூர்யா நடித்தார். ஒரு ஷெட்யூல் நடித்து முடித்த அவர் சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து விலகினார். அதற்கு பிறகு அதில் அருண் விஜய் கமிட்டானார். மும்முரமாக நடந்த ஷூட்டிங் முடிந்திருக்கிறது. விரைவில் படம் வெளியாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் வணங்கான் படத்தை பார்த்தார் அருண் விஜய். படத்தை பார்த்த அனைவருமே நெகிழ்ந்துபோய்விட்டதாக கூறப்பட்டது.

பாலாவுக்கு கடிதம்: இந்நிலையில் வணங்கான் படம் குறித்து இயக்குநர் பாலாவுக்கு அருண் விஜய் எழுதிய கடிதத்தில், மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் திரு. பாலா சார் அவர்களுக்கு, நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக "எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற 'வணங்கான்' படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
வார்த்தைகள் இல்லை பாலா சார்: நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன்.

எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை! இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும்... உங்கள் அருண் விஜய்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆவலில் அருண் விஜய்: முன்னதாக அருண் விஜய் பல வருடங்களாக சினிமாவில் நடித்துவந்தாலும் அவருக்கென்று ஒரு திருப்புமுனை கிடைக்காமல் இருந்தது. சூழல் இப்படி இருக்க கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து முத்திரை பதித்தார். அந்தப் படத்துக்கு பிறகு மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்தார் அருண் விஜய். இந்தச் சூழலில் வணங்கான் படம் பாலா இயக்கம் என்பதால் இந்தப் படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர்.


Click it and Unblock the Notifications











