ரஜினியின் 'பாண்டியன்' ரீமேக்கில் ஆர்யா?
சென்னை: ரஜினியின் சூப்பர்ஹிட் படங்களில் ஒன்றான பாண்டியன் படத்தின் ரீமேக்கில் நடிகர் ஆர்யா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ரஜினியின் படங்களை ரீமேக் செய்வது மற்றும் படங்களுக்கு அவரின் தலைப்புகளை வைப்பது ஆகியவை தமிழ்த் திரையுலகில் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
ரஜினியின் மிகப்பெரிய ஹிட் படமான பில்லாவை 8 வருடங்களுக்கு முன் இயக்குநர் விஷ்ணுவர்த்தன் ரீமேக் செய்ய அஜீத் நடித்து இருந்தார்.

அஜீத்தின் நடிப்பில் வெளியான பில்லா வெற்றிப் படமாக மாறியதுடன் வசூலையும் குவித்தது. அதற்குப் பின்னர் ரஜினி படங்களை ரீமேக் செய்த அனைவரும் அதில் தோல்வியே கண்டனர்.
மாப்பிள்ளை, முரட்டுக்காளை என்று இதற்கு பல உதாரணங்களை கூறலாம். மேலும் ரஜினியின் தலைப்புகள் வைக்கப்பட்ட படங்கள் கூட பெரிதும் வெற்றி பெறாத சூழ்நிலையே நிலவுகிறது(பாயும் புலி, தங்கமகன்).
ஏனெனில் ரஜினியின் இடத்தில வேறு ஒருவரை வைத்துப் பார்க்க ரசிகர்கள் விரும்புவதில்லை. ஆனால் தர்மதுரை, போக்கிரிராஜா, வீரா என்று அவரின் தலைப்புகளை தங்கள் படங்களுக்கு வைப்பது இன்னும் குறைந்த பாடில்லை.
இந்நிலையில் நடிகர் ஆர்யா எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான பாண்டியன் படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
முன்னதாக இயக்குநர் சுராஜ் இப்படத்தை இயக்குவார் என்று செய்திகள் வெளியான நிலையில், சுராஜ் இந்த செய்தியை மறுத்திருக்கிறார்.அவர் கூறும்போது நான் தற்போது முன்னணி நடிகர் ஒருவரை வைத்து படமெடுக்க பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறேன்.
பாண்டியன் ரீமேக்கை நான் இயக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அப்படியானால் இந்தப் படத்தை இயக்கப் போவது யார்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
நாயகன் ஆர்யா இந்த கேள்விக்கான பதிலை சொல்வாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











