40 கதை கேட்டு தூங்கிய அஸ்வினை நியாபகம் இருக்கா?.. அந்த வலி போகாதுனு புலம்புறாரு .. அப்படி என்ன ஆச்சு?
சென்னை: சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர் அஸ்வின் குமார். என்ன சொல்லப்போகிறாய் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசிய விஷயத்தை கேட்டு பலரும் அவருக்கு எதிராக விமர்சனத்தை முன்வைக்க; அதை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினார். அதனையடுத்து செம்பி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர்; தற்போது தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கோவையை சேர்ந்த அஸ்வின் குமார்; விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஃபிஸ் என்ற சீரியலில் நடித்து தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்தார். அந்த சீரியலுக்கு பிறகு ரெட்டை வால் குருவி, நினைக்க தெரிந்த மனமே, ராஜா ராணி என ஏகப்பட்ட சீரியல்களில் நடித்தார். அவரது அழகுக்கும், நடிப்புக்கும் தனி ரசிகர் பட்டாளமும் உருவானது. சீரியல் மட்டுமின்றி சோலோ பாடலிலும் ஆடி தன்னை நிரூபித்த அவருக்கு; குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய அடையாளத்தை கொடுத்தது.

அஸ்வினின் பேச்சு: சின்னத்திரை, ஆல்பம் பாடல், ரியாலிட்டி ஷோ என பல ப்ளாட்ஃபார்ம்களில் பிஸியாக இருந்த அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அப்படி அவர் என்ன சொல்லப்போகிறாய் என்ற படத்தில் நடித்தார். சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அவர், "எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. கதை கேட்கும்போது அந்தக் கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். இந்தக் கதைக்கு முன்னதாக 40 கதைகள் கேட்டேன். இந்தக் கதை கேட்கும்போதுதான் தூங்கவில்லை' என பேசிவிட்டார்.
சிக்கிய அஸ்வின்: அவர் அப்படி பேசியது பலருக்கும் முக சுளிப்பை ஏற்படுத்தியது. மேலும் இப்போதே இவ்வளவு தலைக்கனமாக இருக்கிறாரே; இப்படியெல்லாம் இருந்தால் சினிமா சீக்கிரமே தூக்கி தூர வீசிவிடும் என்றெல்லாம் விமர்சனத்தை முன்வைத்தார்கள். எங்கே போனாலும் அஸ்வினை சுற்றி அந்தப் பேச்சின் தாக்கத்தால் ஒரு நெகட்டிவிட்டி பரவிக்கொண்டே இருந்தது. அதை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினார் என்றே சொல்ல வேண்டும். ஒருவழியாக அதிலிருந்து மீண்டும் செம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
அஸ்வினின் பேட்டி: இந்நிலையில் அந்த பேச்சின்போது இருந்த மனநிலைமை குறித்து இப்போது மனம் திறந்து பேசியிருக்கிறார் அஸ்வின் குமார். தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில்,"கடைசிவரை அந்த புண் எனக்கு இருந்துகொண்டேதான் இருக்கும். அது போகவே போகாது. மனிதம் என்றால் என்னவென்ற கேள்வி எனக்கு இருக்கும். யாரும் யாருடைய கையை பிடித்தும் அழைத்து செல்ல வேண்டாம். நீங்கள் எதுவுமே செய்யாமல் இருந்தாலே மனிதம்தான். அதுகூட இல்லாமல் இருக்கிறோமே என வருத்தம்" என்றார்.
திருமணம் பற்றி: மேலும் திருமணம் பற்றி பேசிய அவர், "திருமணத்தை பொறுத்தவரை நல்ல பெண் இருந்தால் போதும் என்ற எண்ணம் வந்துவிட்டது. திருமணம் எனக்கு நாளையே நடக்கலாம்; பத்து வருடங்கள் கழித்தும்கூட நடக்கலாம். எனக்கு போராட்டங்கள் நிறைய இருந்திருக்கின்றன. எனது நண்பர் இல்லை என்றால் நான் இங்கு இல்லை" என்றார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள், அஸ்வின் பேச்சில் பக்குவம் தெரிகிறது. நிறைய பார்த்துவிட்டார்போல என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











