Suriya - நீங்கள் அழுதால் விஜயகாந்த் வந்துவிடுவாரா?.. சூர்யாவை வெளுக்கும் பயில்வான் ரங்கநாதன்
சென்னை: விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தமிழ்நாடு முழுவதிலுமிருந்து சாரை சாரையாக மக்கள் சென்னை சென்று விஜயகாந்த்தின் உடலுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினர். இந்த சூழலில் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபோது சூர்யா தேம்பி தேம்பி அழுதது அத்தனையும் நடிப்புதான் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
விஜயகாந்த் ஏராளமான உதவிகளை செய்தவர். அவரால் சாமானியர்கள் முதல் தற்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், சூர்யாவை உதவி பெற்றிருக்கிறார்கள். இதனாலேயே அனைவரது மனதிலும் அவருக்கென்று தனி இடம் இருக்கிறது. விஜயகாந்த் என்றாலே கொடுத்த வாக்கை தவறாமல் நிறைவேற்றுவார்; அவரது அலுவலகத்துக்கு சென்றால் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு வரலாம் என்ற நிலைதான் இருந்தது. சினிமாவில் தன்னை போல் பிறரும் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டவர் அவர்.

உடல்நலக்குறைவு: சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த அவர் எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஆனால் அரசியல் தளத்தில் அவருக்கு ஏற்பட்ட துரோகங்களும், சறுக்கல்களும் விஜயகாந்த்துக்கு மன உளைச்சலை கொடுத்தது. அதோடு உடல்நிலையும் சரியில்லாமல் போனது. அதனையடுத்து சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் ஆக்டிவ் அரசியலில் இருந்து விலகி முழு ஓய்வில் இருந்தார்.
உயிரிழப்பு: சூழல் இப்படி இருக்க கடந்த மாதம் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. தமிழ்நாடெங்கிலும் இருந்து அவரது உடலுக்கு நேரில் வந்து லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
தேம்பி தேம்பி அழுத சூர்யா: இதற்கிடையே சூர்யாவுக்கு அவருடைய கரியரின் ஆரம்பத்தில் விஜயகாந்த் உதவி செய்திருக்கிறார். பெரியண்ணா படத்தில் விஜயகாந்த் நடித்ததன் காரணமாக அந்தப் படம் பரவலாக அறியப்பட்டது. ஆனால் விஜயகாந்த் உயிரிழந்தபோது சூர்யா வெளிநாட்டில் இருந்ததால் நேரில் வர முடியவில்லை. அதனையடுத்து காரில் இருந்தபடி இரங்கல் தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அது விமர்சனத்தை சந்தித்தது.
இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் நினைவிடத்துக்கு வந்த சூர்யா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது தேம்பி தேம்பி அழவும் செய்தார். அதனையடுத்து சிவகுமார், சூர்யா, கார்த்தி மூன்று பேரும் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், “சூர்யா வீட்டிலிருந்து வரும்போதே கிளிசரின் போட்டுவிட்டு வந்தாராம். அவர் அழுதால் விஜயகாந்த் மீண்டும் வந்துவிடுவாரா.
நடிப்பு: காரில் சென்றுகொண்டிருக்கும்போதே சூர்யா இரங்கல் தெரிவித்ததுகூட நடிப்புதான். தற்போது சிவகுமார், கார்த்தி, சூர்யா மூன்று பேரும் அஞ்சலி செலுத்த என்ன தெரியுமா காரணம். விஜயகாந்த்தின் நினைவிடத்துக்கு செல்லவில்லை என்றால் கெட்ட பெயர் வந்துவிடும். நம் மகன்களின் படங்களை மக்கள் பார்க்கமாட்டார்கள் என்ற பயத்தில்தான் மகன்களை அழைத்துக்கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
சூர்யாவின் திருமணத்தில் விஜயகாந்த் கலந்துகொள்ளமாட்டேன் என்று சொல்லிவிட்டார். ஏனென்றால் அந்த சமயத்தில் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கும் பத்திரிகை வைத்திருந்தார். அரசியல்வாதிகள் கலந்துகொள்ளும் நிகழ்வில் தானும் கலந்துகொண்டால் பிரச்னை வரும் என்ற நினைப்பில் திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து சூர்யா வீட்டுக்கு சென்று திருமண பரிசை கொடுத்துவிட்டு வந்தார்” என்றார்.


Click it and Unblock the Notifications











