கருப்பு படத்தில் நடிக்க விஜய்க்கு ஆர்வம்.. ஆனாலும்.. சீக்ரெட் சொன்ன இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி
சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் கருப்பு. முதன்முறையாக பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை பற்ற வைத்திருக்கிறது. இப்போதைய சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே படமானது ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் வேலைகள் முடியாததால் ரிலீஸ் ஆகவில்லை. ஒருவழியாக மே மாதம் 14ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கங்குவா படத்தில் எதிர்பார்க்காத அடியை வாங்கிய சூர்யா அதிலிருந்து மெல்ல மீண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்தார். சிவா இயக்கிய படத்தால் ஏற்பட்ட மோசமான விஷயங்களை ரெட்ரோ சரிக்கட்டும் என்று நம்பியிருந்தார். ரசிகர்களும் அதீத ஆர்வத்தை வைத்திருந்தார்கள். ஆனால், எப்போதும் க்ளாஸிக்காகவும், கமர்ஷியல் டச்சோடும் படம் எடுக்கும் கார்த்திக் சுப்புராஜ் இந்த முறை ஏனோ தெரியவில்லை பயங்கரமாகவே சொதப்பிவிட்டார் என்று ரசிகர்கள் பலர் கூறினார்கள்.

ஆர்.ஜே.பாலாஜியுடன் சூர்யாவின் கருப்பு: அதேசமயம் இது அவ்வளவு ஒன்றும் மோசமில்லை; கங்குவா படத்துக்கு இது சூப்பர்தான் என்றும் ஒரு பேச்சு ஓடியது. அதுமட்டுமின்றி இன்னும் சில வருடங்கள் கழித்து ரெட்ரோவை கொண்டாடுவார்கள் பாருங்கள் என்று சிலர் சத்தியமும் செய்திருக்கிறார்கள். சூர்யா ஒரு தரமான ஹிட் கொடுத்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டன. எனவே இப்போது ஒரு அவசியமான ஹிட் தேவைப்படுகிறது.இப்படிப்பட்ட சூழலில்தான் ஆர்.ஜே.பாலாஜியின் கருப்பு படத்தில் நடித்திருக்கிறார்.
படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு: பாலாஜி ஏற்கனவே இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. சூர்யாவிடம் சொன்ன கதை நன்றாக இருக்கிறது என்றும்; இப்படத்தின் மீது சூர்யாவுக்கு ரொம்பவே நம்பிக்கை இருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத்தினர் கூறுகிறார்கள். சூர்யாவை தாண்டி ரசிகர்களுக்கும் இப்படத்தின் மீது ஆவல்தான் இருக்கிறது. அண்மையில் வெளியான படத்தின் டீசரும் நல்ல ரெஸ்பான்ஸைத்தான் பெற்றிருக்கிறது. படமானது தேர்தல் முடிவுகள் எல்லாம் வந்த பிறகு மே 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
ஆர்.ஜே.பாலாஜி பேட்டி: இந்நிலையில் படம் பற்றி இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சமீபத்தில் அவர் படம் பற்றி பேசுகையில், "கருப்பு படத்தின் ஒன்லைன் உருவானபோது அந்தக் கதையை விஜய்யிடம்தான் சொன்னேன். அதை கேட்ட அவர் நடிப்பதற்கும் ஆர்வம் காட்டினார். ஆனால் ஒன்லைன் அவருக்கு பிடித்திருந்தலும் திரைக்கதையை முழுவதுமாக உருவாக்க காலம் தேவைப்பட்டது. எனவே படத்தை உடனடியாக தொடங்க முடியவில்லை.
விஜய்யின் அரசியல்: அந்த சமயத்தில் விஜய் தனது அரசியல் பயணத்தில் கவனம் செலுத்த தொடங்கியிருந்தார். எனவே அவர் நடிக்கும் திட்டம் அதுவாகவே நின்றுவிட்டது. அதற்கு பிறகு சில மாற்றங்களுடன் கதையை உருவாக்கினேன். இந்த காலத்துக்கு ஏற்றவாறு மாற்றங்களை செய்திருந்தேன். அந்த புது வெர்ஷனை சூர்யாவிடம் சொன்னேன். அவருக்கும் கதை ரொம்ப பிடித்துவிட்டது. இப்போது அனைத்தும் நடந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications















