Box Office: விஜய்க்கு தொடர்ந்து நன்றி சொல்லும் பிக் பாஸ் ராஜு.. பன் பட்டர் ஜாம் 3 நாள் வசூல் எவ்வளவு?
சென்னை: ராகவ் மிர்தாத் இயக்கத்தில் பிக் பாஸ் ராஜு, பாவ்யா, ஆதியா, சரண்யா பொன்வண்ணன், சார்லி, தேவதர்ஷினி, பப்பு மற்றும் விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பன் பட்டர் ஜாம் திரைப்படம் மட்டுமே ரசிகர்களை குறைந்தபட்சம் தியேட்டருக்கு வரவழைத்தது. மற்ற படங்கள் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை.
இந்த ஜூலை மாதம் இதுவரை வெளியான தமிழ் படங்களில் 10 கோடிக்கும் அதிகமான வசூலை 3பிஹெச்கே படம் மட்டுமே கடந்தது. ராமின் பறந்து போ படம் 6 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. வனிதா விஜயகுமாரின் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர், கலையரசனின் டிரெண்டிங், விஜய் சேதுபதி மகனின் பீனிக்ஸ் உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியைத் தழுவியுள்ளன.

மேலும், பல சிறிய பட்ஜெட் படங்கள் சில லட்சங்கள் மட்டுமே வசூல் செய்து தயாரிப்பாளர்களுக்கு பெரிய தலைவலியை கொடுத்துள்ளன. வனிதா விஜயகுமாரின் படத்தை ஒரு வாரத்திற்குள் யூடியூபில் வெளியிட்டு, அதை அங்கே பார்க்க 89 ரூபாய் செலுத்த வேண்டும் என தொகை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், அப்படியும் அந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய்க்கு எத்தனவாட்டி நன்றி சொன்னாலும் பத்தாது: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு டைட்டில் வென்ற ராஜு ஜெயமோகன் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர். இந்த படத்திலும், கில்லி உள்ளிட்ட படங்களில் விஜய் எப்படி நடித்திருப்பாரோ அதே போல பல இடங்களில் அவரது மேனரிஸத்தை அப்படியே காப்பி அடித்துத் தான் நடித்திருக்கிறார். நேற்று நெல்லையில் மக்களுடன் படத்தை பார்த்த ராஜு மீண்டும் தளபதி விஜய்க்கு நன்றி கூறினார். மேலும், எத்தனை பிரஸ்மீட் வைத்தாலும் விஜய் அண்ணாவுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன், அவர் இல்லையென்றால் நானில்லை, இந்த படமும் வந்திருக்காது என்றார்.
ஞாயிற்றுக்கிழமை பிக்கப்பான வசூல்: முதல் நாளில் வெறும் 20 லட்சம் மட்டுமே பன் பட்டர் ஜாம் திரைப்படம் வசூல் அள்ளியதாக sacknilk இணையதளம் தெரிவித்து இருந்தது. சனிக்கிழமையும் 20 லட்சம் வரை வசூல் செய்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த வாரம் ஜாலியாக சிரித்துக் கொண்டு ஒரு படத்தை பார்க்கலாமே என முடிவு செய்து பன் பட்டர் ஜாம் படத்துக்குச் சென்ற நிலையில், 50 லட்சத்திற்கும் மேலான வசூலை ஞாயிற்றுக்கிழமை மட்டுமே அந்த படம் அள்ளியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
1 கோடி வசூல்: முதல் 3 நாட்களில் இதுவரை 96 லட்சம் முதல் 1 கோடி வரை பிக் பாஸ் ராஜு நடிப்பில் வெளியான பன் பட்டர் ஜாம் திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜுவுக்கு இதுவொரு நல்ல ஸ்டார்ட் தான் என்றும் தொடர்ந்து அவர் ஹீரோவாக நடித்தால், பாக்ஸ் ஆபீஸிலும் பெரிதாக கல்லா கட்டுவார் என்று கோலிவுட் வட்டாரங்கள் பேசத் தொடங்கியுள்ளன. கூடிய சீக்கிரமே தனது அடுத்த படத்தையும் பிக் பாஸ் ராஜு ஆரம்பித்து விடுவார் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











