ஹீரோவான பிக் பாஸ் விக்ரமன்.. ஏகப்பட்ட தடைகளை தாண்டி வந்துருக்காரு.. ஷூட்டிங் ஓவர்!
சென்னை: கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. திலகவதி கரிகாலன் தயாரித்துள்ள இந்தப் படத்தை பிரீத்தி கரிகாலன் இயக்கியுள்ளார்.
உறவுகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் நிறைந்த இந்தப் படைப்பு, குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி அர்ஜுனனுக்கு அடுத்தபடியாக ஏகப்பட்ட ரசிகர்களின் ஹீரோவாக மாறிய விக்ரமன் அந்த நிகழ்ச்சி நிறைவடையும் சமயத்திலேயே பல சர்ச்சைகளில் சிக்கினார். இந்நிலையில், அவர் ஹீரோவாக நடித்துள்ள படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோவான பிக் பாஸ் விக்ரமன்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் எனும் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவில் முதல் சீசனில் பங்கேற்ற ஆரவ், ஹரிஷ் கல்யாண் என பலர் சினிமாவில் ஹீரோக்களாக வலம் வருகின்றனர். கவின், ஆரி அர்ஜுனன், ரியோ, ராஜு ஜெயமோகன் என பல ஹீரோக்களை பிக் பாஸ் உருவாக்கியுள்ளது. இந்நிலையில், விக்ரமனும் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார்.

ஏகப்பட்ட வேலை: படத்தின் நிறைவு குறித்துப் பேசிய தயாரிப்பாளர் திலகவதி கரிகாலன், "ஒரு படத்தை திட்டமிட்டபடி முடிக்க ஒவ்வொரு துறையும் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும். அந்தவகையில் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் எங்கள் இயக்குநர் என அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி உள்ளனர். படத்தை வெளியிடுவதற்கான சரியான தருணத்தை திட்டமிட்டு வருகிறோம். பார்வையாளர்களிடம் படம் சரியாக சென்றடைய வேண்டும் என்பதற்கான மார்க்கெட்டிங், புரோமோஷன் பணிகள் போன்றவற்றையும் தெளிவாக திட்டமிடுவோம்" என்று குறிப்பிட்டார்.

யாரு ஹீரோயின்: இந்த காதல் கலந்த பொழுதுபோக்குத் திரைப்படத்தில் விக்ரமன் கதாநாயகனாக நடிக்க, சுப்ரிதா அவருக்கு ஜோடியாக திரையில் தோன்றுகிறார். ஜென்சன் திவாகர் மற்றும் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீதர் ஒளிப்பதிவும், ராமர் படத்தொகுப்பும், அஜீஷ் அசோகன் இசையும் இந்தப் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கின்றன.
படத்தின் தலைப்பு, டீசர், டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீடு குறித்த அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











