அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!!
அடுத்த படத்தை அறிவிக்கும் முன் ஆயிரம் முறை ஜோசியம் பார்க்கும் அஜீத், பில்லா-2 தான் தனது அடுத்த படம் என்பதை ஒருவழியாக நேற்று அறிவித்துள்ளார். இந்தப் படத்தை இந்துஜா குழுமத்தின் ஐ என் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கே பாலாஜியின் பில்லா படத்தை, 28 ஆண்டுகள் கழித்து அதே பெயரில் ரீமேக் செய்தனர். அஜீத் ஹீரோவாக நடித்தார். படம் பெரும் வெற்றி பெற்றது.
இப்போது பில்லா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். ரஜினியை வைத்து பில்லா எடுத்த பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜியும் ஜார்ஜ் பயஸும் இந்தப் படத்துக்கு இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.
பொதுவாக இரண்டாம் பாகம் என்றால், முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்து தொடங்குவார்கள். ஆனால் இந்தப் படத்தில், முதல் பாகத்துக்கு முன்பு நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.
பில்லா எப்படி டானாக மாறினான்...அவனது பின்னணி போன்றவைதான் இந்த இரண்டாம் பாகத்தின் கதைக் கரு. தமிழ் சினிமாவில் இந்த ஸ்டைலில் இரண்டாம் பாகம் உருவாவது இதுவே முதல்முறை.
முதலில் இந்தப் படத்தை விஷ்ணு வர்தன் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, அவர் விலகிக் கொண்டதால், உன்னைப் போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலெட்டி இயக்குகிறார்.
இந்துஜா குழுமத்தின் ஐ என் எண்டர்டெயின்மெண்ட் முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படம் இது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜீத்துடன் மீண்டும் இணைவது மிகுந்த உற்சாகத்தைத் தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











