'தன் முயற்சியில் மனம் தளராமல்' ரஜினிக்கு தொடர்ந்து வலைவீசும் பாஜக!
ரஜினிக்கு நாட்டின் உயர்ந்த சினிமா விருதினை அறிவித்துள்ளது மோடி தலைமையிலான மத்திய அரசு.
நூற்றாண்டு விழா காணும் இந்திய சினிமாவின் சிறந்த பிரபலம் என்ற விருது முதல் முறையாக ரஜினிக்குதான் வழங்கப்படுகிறது.
ரஜினிக்கு விருது கொடுப்பதும், அதற்கான தகுதிகள் குறித்தும் இங்கே கேள்விகள் எழவில்லை. நிச்சயம் இந்த விருது, இதைவிட பெரிய விருதுகளுக்கு அவர் தகுதியானவர்தான்.

சர்ச்சை
ஆனால் விருதினை அறிவித்துள்ள விதம், நேரம்தான் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளதாக சர்ச்சை கிளப்பத் தொடங்கியுள்ளனர்.
ரஜினியை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இன்னமும் மனம் தளராத பாஜக, அதன் அடுத்த கட்ட நகர்வாகத்தான் அவருக்கு இந்த விருதினை வழங்கியுள்ளதாக விமர்சனம் கிளம்பியுள்ளது.

சிக்காத ரஜினி
நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினியின் ஆதரவு கேட்டு அவரது வீட்டுக்கே போனார் பிரதமர் நரேந்திர மோடி. அவரை வரவேற்று டீ கொடுத்து பேசி அனுப்பினார் ரஜினி. அரசியல் அல்லது ஆதரவு என எதிலும் அவர் சிக்கிக் கொள்ளவில்லை.

தவிர்ப்பு
தேர்தலில் பாஜக வென்று மோடி பிரதமராகப் பதவி ஏற்கிறார். அந்த விழாவுக்கு முக்கிய விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களில் முக்கியமானவர் ரஜினி. அவர் நிச்சயம் போவார் என்றுதான் பலரும் எதிர்ப்பார்த்தனர். ஆனால் ரஜினியோ லிங்கா படப்பிடிப்பில் இருந்து கொண்டு, தன் மனைவி மற்றும் மூத்த மகளை மட்டும் அனுப்பி வைத்தார். விழாவுக்கு ராஜபக்சே சிறப்பு விருந்தினராக வந்ததால் ரஜினி போகாமல் தவிர்த்துவிட்டதாகக் கூறப்பட்டது.

அமித்ஷாவின் முயற்சிகள்
அடுத்து ரஜினியை தமிழக பாஜகவின் தலைவராக்கிவிட படாத பாடுபட்டது பாஜக. முதல் கட்டமாக, பாஜகவின் தலைவர் அமித் ஷாவே நேரடியாக ரஜினியைச் சந்தித்து பாஜகவின் திட்டத்தைக் கூறினார். நீங்கள்தான் 2016 தேர்தலின் முதல்வர் வேட்பாளர் என்றும் சொல்லிப் பார்த்தார். வழக்கம் போல ரஜினி, பின்னர் பேசலாம் என்று அனுப்பிவிட்டார். அவரைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர்கள் மாறி மாறி ரஜினியை அழைத்தபடி இருந்தனர்.

நேரம் பார்த்து
அவரோ எதற்கும் அசைவதாய் இல்லை. அந்த நேரம் பார்த்து தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குப் போக, இதுவே சரியான தருணம் என ரஜினியை தீவிரமாக அழைத்தது தமிழக பாஜக. டெல்லியிலிருந்தும் ரஜினிக்கு தொடர் அழுத்தங்கள். அவரோ, எதையும் கண்டு கொள்ளாமல் லிங்கா ஷூட்டிங்கிலேயே இருந்தார்.

அதிமுக குஷி
ஜெயலலிதா சிறையிலிருந்து ஜாமீனில் வெளியாக, அவருக்கு முதல் வாழ்த்து அனுப்பியதோடு, வழக்கிலிருந்து மீண்டு வர பிரார்த்தனை செய்வதாகவும் ரஜினி கடிதம் அனுப்ப.. 'ஆஹா ரஜினி நம்மாளுப்பா' அதிமுகவினர் கொண்டாட ஆரம்பித்தனர்.

தமிழிசையின் உளறல்
கடுப்பான தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ரஜினியை நம்பி நாங்கள் கட்சி நடத்தவில்லை என்று கூறிவிட்டார். பாஜக மீது ஆரம்பத்திலிருந்தே ரஜினி ரசிகர்களுக்கு ஈர்ப்பில்லை. மோடி என்ற தனி மனிதர் மீதான பிடிப்பு மட்டும்தான் அவர்களுக்கு. இதைப் புரிந்து கொள்ளாமல், தமிழிசையும் இதர தமிழக பாஜக தலைவர்களும் உளறிக் கொட்டிக் கொண்டிருக்க, இவற்றைச் சரிசெய்யும் வேலையும் டெல்லி தலைமைக்கு கூடுதலாகச் சேர்ந்துவிட்டது.

கமலையும் விடவில்லை...
ஒருபக்கம் ரஜினியை கட்சிக்கு தலைமை ஏற்க வருமாறு தூதுமேல் தூதாக விட்டுக் கொண்டிருக்கும் பாஜக, இன்னொரு பக்கம், தூய்மை இந்தியா திட்டத்துக்கான தூதர்களில் ஒருவராக கமலைத் தேர்வு செய்தது. அவரும் ஏரி குளங்களைத் தூய்மை செய்யும் பணியில் இறங்க, அந்த இடங்களுக்குப் போய் கமல் பக்கத்தில் நின்று போஸ் கொடுத்தார் தமிழிசை.

விருது அரசியல்
இருந்தாலும் ரஜினி என்ற பிரம்மாஸ்திரத்தை அத்தனை சுலபத்தில் விட்டுவிட மனசில்லை பாஜகவுக்கு. அதன் விளைவுதான் அவருக்கு நூறாண்டு இந்திய சினிமாவின் சிறந்த பிரபலம் என்ற பெரிய விருதினைக் கொடுத்திருப்பதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
ஆனால் இந்த மாதிரி தந்திரங்களில் சிக்கிக் கொள்பவரா ரஜினி... இருபது ஆண்டுகள் எத்தனையோ அரசியல் அழைப்புகள் வந்தும், ஏற்காமல், மேலே ஒற்றை விரலைக் காட்டிவிட்டு, அடுத்த படத்தை அறிவிக்கும் ரஜினி இந்த விருது அரசியலுக்கு மசிவாரா?


Click it and Unblock the Notifications











