அஜித்தான் முன்னுதாரணம்.. இரண்டு கட்சிகளுமே குறி வைக்கின்றன.. ப்ளூ சட்டை மாறன் ஓபன்
சென்னை: அஜித் இப்போது கார் ரேஸிலும், சினிமாவிலும் கவனத்தை செலுத்திவருகிறார். ஆரம்பத்திலிருந்தே அவர் அரசியலிலிருந்து விலகித்தான் இருக்கிறார். ஆனால் சில சூழ்நிலைகள் அரசியல் களத்தில் அவரது பெயரையோ, புகைப்படத்தையோ மற்றவர்கள் பயன்படுத்தும்படி மாற்றிவிடுகின்றன. அப்படித்தான் விஜய்யை வீழ்த்துவதற்கான வழிகளில் அஜித்தின் புகைப்படத்தை பயன்படுத்தி அவர் ரசிகர்களின் வாக்குகளை அறுவடை செய்யும் வழியிலும் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் அரசியல் கட்சி தலைவர்கள்.
அஜித்குமார் சினிமாவில் முழு கவனம் செலுத்திவந்தார். அவருக்கு நீண்ட வருடங்களாக இருந்த ரேஸிங் ஆசையை தீர்த்துக்கொள்வது என முடிவு செய்து; தனது கைகளில் ஒருக்கும் படங்களை முடித்துக்கொடுத்தார். அதன் காரணமாக அவரது நடிப்பில் கடந்த வருடம் மட்டும் குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்கள் வந்தன. அவை இரண்டுமே தோல்வியை சந்தித்தன. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன், சிறுத்தை சிவா ஆகியோரது இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். விரைவில் படத்தின் அப்டேட்டுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரேஸிங்கில் கவனம்: தனது ஆசைப்படி கார் ரேஸில் கடந்த சில காலமாகவே தீவிரமாக கவனம் செலுத்திவருகிறார். உலகத்தின் பல நாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் தனது ஏகே ரேஸிங் டீமுடன் கலந்துகொண்டு வெற்றியும் பெறுகிறார். ஒவ்வொரு போட்டியிலும் 100 விழுக்காடு உழைப்பை போடும் அவரை பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். அதேசமயம் ரேஸ் செய்யும்போது பத்திரமாக இருங்கள் ஏகே என்றும் அன்பு வேண்டுகோள் வைத்துவருவது குறிப்பிடத்தக்கது.
அரசியலிலிருந்து தூரம்தான்: இதற்கிடையே அஜித்தை பொறுத்தவரை அவர் அரசியலிலிருந்து எப்போதும் தூரமாகவே இருப்பார். தான் உண்டு, தன் வேலை உண்டு, குடும்பம் உண்டு என்று இருப்பவர். அவர் திரைத்துறைக்கு வந்து இத்தனை வருடங்களில் ஒரு தடவைகூட அரசியல் ரீதியான கருத்தை பதிவு செய்ததில்லை. அதேசமயம் தனக்கு நெருக்கமானவர்களிடம் நன்றாகவே அரசியல் பேசுவாராம். தமிழ்நாட்டு அரசியலில் தன்னுடைய நிலைப்பாட்டினை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தாலும்; சிலர் அவரை விடுவதாக இல்லை.
எடப்பாடி பழனிசாமி செய்தது: அதுவும் இப்போது விஜய் வேறு அரசியல் கட்சியை ஆரம்பித்து தேர்தலில் தனித்து நிற்கிறார். எனவே அவருக்கு அஜித் ரசிகர்களின் வாக்கு விழுந்துவிடக்கூடாது என்பதில் சிலர் தெளிவாக இருக்கிறார்கள். இதுவரை மறைமுகமாக அதற்கான செயல்கள் செய்யப்பட்டன. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ நேற்று நாகர்கோவிலில் நடந்த பரப்புரையின்போது, அஜித்துடன் தான் இருக்கும்படி ஒரு புகைப்படத்தை ஃப்ரேம் செய்து மக்களிடம் காட்டிய சம்பவம் அனைவரிடமும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. விஜய்யை வீழ்த்துவதற்கு இப்படி இறங்கிவிட்டார்களே என பலரும் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இந்நிலையில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "அஜித் ரசிகர்களை திமுக மற்றும் அதிமுக இரண்டுமே குறி வைக்கின்றன. அவர்கள் யாருக்கு அதிகம் வாக்களிப்பார்கள் என தெரியவில்லை. ஆனால் நிச்சயம் வாக்களிக்கும் கடமையை செய்வார்கள். இது அஜித் முன்னுதாரணமாக திகழ்ந்த நல்ல விசயங்களில்.. தேர்தலில் தவறாமல் வாக்களிப்பதும் ஒன்று" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications















