புத்தாண்டை முடிச்சிட்டு பொறுமையா வாங்க.. விஜயகாந்த்துக்காக ஹீரோக்களை வெளுக்கும் ப்ளூ சட்டை மாறன்
சென்னை: விஜயகாந்த் உயிரிழப்புக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தாத சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு ஆகியோரை ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அவரது விமர்சனத்துக்கு ரசிகர்களும் ஒருசேர ஆதரவையும், கண்டனத்தையும் தெரிவித்துவருகிறார்கள்.
விஜயகாந்த் நேற்று முன் தினம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். நுரையீரல் அழற்சி காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவரது உயிர் பிரிந்தது. இதனால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் சோகத்தில் மூழ்கியது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்து பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் படையெடுத்து வந்தனர்.

மக்கள் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம்: தீவுத்திடலில் பொதுமக்கள் மற்றும் பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல் அங்கிருந்து கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது லட்சக்கணக்கான மக்கள் செல்லும் வழி நெடுகிலும் விஜயகாந்த்தின் உடலுக்கு மலர்கள் தூவியும், சாலையில் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
அரசு மரியாதை: அதனையடுத்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு அரசு மரியாதையுடன் அவரது உடல் சந்தன பேழையில் வைத்து உடலை அடக்கம் செய்தனர். இதற்கிடையே தீவுத்திடலுக்கு உடல் போகும் முன்னர் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தபோது விஜய், சத்யராஜ், இளையராஜா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர்.
தீவுத்திடலில் விஜயகாந்த்தின் உடல் வைக்கப்பட்டிருந்தபோது ரஜினிகாந்த், கமல் ஹாசன், லிவிங்ஸ்டன் என பலரும் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய ரஜினிகாந்த், விஜயகாந்த்தின் கோபத்துக்கு பின்னால் ஒரு நியாயம் இருக்கும். அவர் நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் என்று நா தழுதழுக்க பேசிவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கமல் ஹாசனும் தனது பேச்சில் விஜயகாந்த்தையும், அவரது குண நலன்களையும் புகழ்ந்துவிட்டு சென்றார்.
வராத பிரபலங்கள்: தமிழ் சினிமா நடிகர்களில் விஜயகாந்த் முக்கியமானவர் என்பதால் கண்டிப்பாக அனைத்து நடிகர்களும் வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜித், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால்,கார்த்தி, சூர்யா உள்ளிட்டோர் வரவில்லை. அதேசமயம் அஜித் தொலைபேசியில் தொடர்புகொண்டு விஜயகாந்த் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் சிவகார்த்திகேயன், விஷால், சூர்யா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வராத நடிகர்களை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், வெளிநாட்டில் பிஸியாக இருக்கும் சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு உள்ளிட்டோருக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.புத்தாண்டு நிகழ்ச்சிகள் முடிந்தபிறகு பொறுமையாக வரவும். காரில் சென்றபடியே கேப்டனின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்த சூர்யாவிற்கு சிறப்பு புத்தாண்டு வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருக்கிறார்.
ரசிகர்கள் கண்டனம்: ப்ளூ சட்டை மாறனின் இந்த ட்வீட்டுக்கு ரசிகர்களில் ஒருதரப்பினர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். அதேசமயம் மற்றொரு தரப்பினரோ அவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருக்கிறார்கள். உடனடியாக எப்படி வர முடியும். ப்ளூ சட்டை மாறனைவிடவும் விஜயகாந்த்தை மதிப்பவர்கள்தான் அவர்கள். எனவே இங்கு வந்த பிறகு விஜயகாந்த் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறுவார்கள். அதுவரை ப்ளூ சட்டை வாள் சுழற்றாமல் இருங்கள் என கமெண்ட்ஸும் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











