தளபதி 69.. விஜய்யுடன் மோதப்போகும் வில்லன் இவரா?.. நடந்தா நன்றாகத்தான் இருக்கும்
சென்னை: நடிகர் விஜய் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். இப்போது அவர் GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கடந்த ஐந்தாம் தேதி வெளியான படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் அவர் அதற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியல் களத்தில் குதிக்கவிருக்கிறார். விஜய்யின் கடைசி படத்தை ஹெச்.வினோத் இயக்கவிருக்கும் சூழலில்; அந்தப் படத்தின் வில்லன் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் விஜய் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. இதுவரை 68 படங்களில் நடித்திருக்கிறார் அவர். யாரும் எதிர்பார்க்காத வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக GOAT படத்தில் நடித்து முடித்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இருப்பினும் GOAT படத்துக்கு முன்னதாக வெளியான லியோ படத்துக்கு இந்தப் படமே பரவாயில்லை என்ற எண்ணமும் ரசிகர்களிடையே நீடித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே விஜய் அரசியலுக்கு வருவார் நீண்ட நாட்கள் ஆரூடம் கூறிய சூழலில் சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். கட்சியின் பாடலும், கொடியும் சமீபத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன. அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியும் விஜய்யை கோட்டைக்கு அனுப்பியே தீரவேண்டும் என்ற முழு முனைப்பில் அவரது ரசிகர்கள் உழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
களத்தில் விஜய்: 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய தடத்தை தமிழ்நாடு அரசியலில் வீரியமாக பதித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் விஜய். சமீபத்தில்கூட பெரியார் திடலுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார் விஜய். மேலும் சினிமாவுக்கு முழுக்கு போட்டிருக்கிறார். இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் விஜய் நடிக்கவிருக்கிறார். அசால்ட்டாக பல நூறு கோடி ரூபாய் கணக்கில் வியாபாரம் நடக்கும் ஒரு ஹீரோ சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவதை பலரும் பாராட்டிவருகிறார்கள்.
தளபதி 69: விஜய் நடிக்கவிருக்கும் கடைசி படத்துக்கு தளபதி 69 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தை ஹெச்.வினோத் இயக்க; கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது.அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ப்ரோமோவுடன் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. படத்தின் அறிவிப்பு போஸ்டரில் இடம்பெற்ற விஷயங்களை வைத்து; இந்தப் படம் கொஞ்சம் அரசியல் சாயத்தோடும்; சமூக அக்கறையுடனும் இருக்கும் என்பது உறுதியாகியிருப்பதாக ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
படத்தின் வில்லன்: இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி 69 பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி விஜய்க்கு வில்லனாக அனிமல், கங்குவா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் பாபி தியோல் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. பாபி தியோல் அனிமல் படத்தில் படு ஃபேமஸானார். அதனையடுத்து தென்னிந்திய மொழிகளிலும் நடிப்பதற்கு ஆஃபர்கள் குவிந்துவருவதாக ஒரு தகவல் ஓடியது இங்கு நினைவுகூரத்தக்கது.



Click it and Unblock the Notifications











