Breaking: சிறுத்தைக் குட்டி வந்துடுச்சி டோய்.. நடிகர் கார்த்திக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் ஹேப்பி!
சென்னை: நடிகர் கார்த்திக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் கார்த்தி.
பழம்பெரும் நடிகரான சிவகுமாரின் கடைக்குட்டி சிங்கமான கார்த்திக்கு கடைக்குட்டி சிங்கம் பிறந்துள்ளது என ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தாயும் சேயும் நலம்பெற ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்தி கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

டாப் ஹீரோ
பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா மற்றும் இளைய மகனான கார்த்தி ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஜோதிகாவுடன் முதன் முறையாக இணைந்து நடித்த தம்பி படமும் வரவேற்பை பெற்றது.

கார்த்திக்கு ஆண் குழந்தை
லாக்டவுன் காரணமாக கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் பல பிரம்மாண்ட படங்கள் தேங்கி நிற்கின்றன. இந்நிலையில், மகிழ்ச்சி தரும் விஷயமாக நடிகர் கார்த்திக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்கிற சந்தோஷமான செய்தியை தற்போது, அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

சந்தோஷத்தில் கார்த்தி
நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்களுக்கு, எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் இந்த நேரத்தில் கண்டிப்பாக நிறைய நன்றிகள் சொல்லியே ஆகவேண்டும். குழந்தைக்கு உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களும் தேவை, கடவுளுக்கு நன்றி என ட்வீட் போட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் கார்த்தி.

கடைக்குட்டி சிங்கம்
சிறுத்தை, கடைக்குட்டி சிங்கம் படங்களில் நடித்துள்ள நடிகர் கார்த்திக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள சந்தோஷத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடைக்குட்டி சிங்கத்துக்கு கடைக்குட்டி சிங்கம் பிறந்துள்ளது என்றும், சிறுத்தைக் குட்டி பிறந்துள்ளது என்றும் ஏகப்பட்ட ரியாக்ஷன்களையும் வாழ்த்துகளையும் ரசிகர்கள் தெறிக்க விட்டு வருகின்றனர்.

பெண் குழந்தை
43 வயதாகும் நடிகர் கார்த்திக்கு, 2011ம் ஆண்டு ரஞ்சினி சின்னசுவாமி என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. 2013ம் ஆண்டு கார்த்தி - ரஞ்சினி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு உமையாள் என்கிற அழகான பெயரை சூட்டினர். இந்நிலையில், 7 ஆண்டுகள் கழித்து இரண்டாவது குழந்தைக்கு தந்தை ஆகி உள்ளார் கார்த்தி.

பொன்னியின் செல்வன்
சுல்தான், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என நடிகர் கார்த்தியின் கைவசம் பிரம்மாண்ட படங்கள் உள்ளன. சுல்தான் படத்தின் டப்பிங் பணிகள் அண்மையில் முடிந்த நிலையில், பொங்கலுக்கு மாஸ்டர் படத்துடன் போட்டியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்து வருகிறார் கார்த்தி.


Click it and Unblock the Notifications











