தனுஷுடன் மட்டும் நடிக்கக்கூடாது என்று ஜான்வி கபூருக்கு கண்டிஷனா?.. பிரபலம் சொன்ன சீக்ரெட்
சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் அவரது 50ஆவது படமாகும். அதனை அவரே இயக்கவும் செய்திருந்தார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான படத்துக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். இந்தப் படம் தவிர்த்து இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இட்லி கடை உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன.
இயக்குநரின் மகன் என்ற அடையாளத்தோடு அறிமுகமான தனுஷ் ஆரம்பத்தில் நிறைய கஷ்டங்களை சந்தித்தார். முக்கியமாக அவரது உருவத்தை வைத்து பலரும் கேலி செய்தார்கள். ஆனால் வெல்வதற்கு அழகைவிடவும் திறமை அதீத முக்கியம் என்பதை உணர்ந்து தனது திறமையை வளர்த்து இன்று தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார். முக்கியமாக நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் எழுதுவது, பாடுவது, திரைப்படங்கள் தயாரிப்பது என பல ப்ளாட்பார்ம்களில் ஜொலிக்கிறார் அவர்.

ராயன்: நடிகராக கலக்கிவந்த தனுஷ் பவர் பாண்டி படத்தில் இயக்குநராக அறிமுகமாகி வெற்றி கண்டார். அடுத்ததாக தனது 50ஆவது படமான ராயனை தானே இயக்கி நடித்தார். அதில் எஸ்ஜே சூர்யா, சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா, அபர்ணா முரளி என ஏகப்பட்டோர் தனுஷுடன் நடித்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான ராயன் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அரத பழசான கதையை சுமாரான திரைக்கதையுடன் பட்டி டிங்கரிங் பார்த்து கொடுத்ததால்தான் படம் படுத்துவிட்டது என்று ரசிகர்கள் கூறினார்கள்.
குபேரா: ராயன் படத்தை முடித்த தனுஷ் அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார். வாத்தி படத்தை வைத்து தெலுங்கிலும் ஒரு ரவுண்டு வரலாம் என்று நினைத்திருந்த அவருக்கு அந்தப் படம் சொல்லிக்கொள்ளும்படி போகவில்லை. எனவே குபேரா படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் தெலுங்கின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவும் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: இதற்கிடையே ராயன் படத்தை இயக்கிக்கொண்டிருந்தபோதே அடுத்த படத்தின் இயக்க வேலைகளிலும் இறங்கினார் தனுஷ். அதன்படி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கியிருக்கிறார். அதில் தனுஷின் உறவினர், மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அண்மையில்கூட படத்திலிருந்து வெளியான கோல்டன் ஸ்பேரோ பாடல் யூட்யூப் வியூஸ்களில் சக்கைப்போடு போட்டது. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
இட்லி கடை: மேலும் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார் தனுஷ். DAWN Pictures தயாரிக்கிறது. படத்தை தனுஷே இயக்குகிறார்; ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் நித்யா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் லப்பர் பந்து இயக்குநருடனும் அவர் இணையவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் தனுஷ் குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
செய்யாறு பாலு பேட்டி: தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், "தனுஷ் மிகச்சிறந்த நடிகர். ஆனால் அவருடன் நடிக்கக்கூடாது என்று ஜான்வி கபூருக்கு போனி கபூர் கண்டிஷன் போட்டாரா என்று எனக்கு தெரியவில்லை. அதேசமயம் தனுஷ் படத்தில் தனது மகள் தமிழில் அறிமுகமாவதைவிட விஜய், அஜித் போன்றோரின் படங்களில் அறிமுகமானால் நன்றாக இருக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம். அதன் காரணமாகக்கூட தனுஷுடன் நடிக்கக்கூடாது என்று அவர் சொல்லியிருக்கலாம்" என்றார்.


Click it and Unblock the Notifications











