ஒரு வருஷம் வீட்ல சும்மா இல்லை.. விக்ரமின் தரமான லைன் அப்.. அவரே சொன்ன சூப்பர் விஷயம்
சென்னை: விக்ரம் நடிப்பில் கடந்த வருடம் வீர தீர சூரன் திரைப்படம் வெளியானது. சித்தா இயக்குநர் அருண்குமார் இயக்கியிருந்ததால் பெரிய எதிர்பார்ப்பை படம் பெற்றிருந்தது. முழுக்க முழுக்க கமர்ஷியலாக உருவான அப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அந்தப் படம் மெகா ஹிட்டாகாததில் சியான் ரசிகர்களுக்கு ரொம்பவே வருத்தம்தான். இந்நிலையில் தனது அடுத்த படங்கள் குறித்து அவர் போட்டிருக்கும் இன்ஸ்டா போஸ்ட் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம். தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றிருக்கும் அவருக்கு கடந்த பல வருடங்களாகவே சொல்லிக்கொள்ளும்படியான ஹிட் இல்லை. அவரிடமோ, அவரது ரசிகர்களிடமோ சென்று கடைசியாக எந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது என்று கேட்டால் உடனடியாக பதில் சொல்ல முடியாத நிலைமைதான் இருக்கிறது. அதிலும் பா.இரஞ்சித்துடன் இணைந்த தங்கலான் படத்தில் அவ்வளவு கடுமையாக உழைத்தார் சியான். ஆனால் அப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது.

வீர தீர சூரன்: அந்தப் படத்துக்கு பிறகு கடந்த வருடத்தில் சித்தா இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்தார். அருண் இயக்கிய சித்தா படம் மெகா ஹிட் ஆனதால் ரொம்பவே நம்பிக்கையோடு அவரோடு இணைந்தார் விக்ரம். மேலும், தனது ரசிகர்களுக்கு தில், தூள், சாமி ஸ்டைலில் ஒரு படம் கொடுத்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டதால் அதேமாதிரி ஒரு படத்தை கொடுக்க விரும்பினார். ஆனால் இப்படமும் பெரிதாக ஒர்க அவுட் ஆகவில்லை. படத்தின் சில இடங்களில் எல்லாம் கமர்ஷியல் விஷயங்கள் ஓவர் டோஸாகி ரசிகர்களை ரொம்பவே சோதித்துவிட்டன.
அறிவிப்பு மட்டும் வந்தது: வீர தீர சூரன் படத்துக்கு பிறகு மண்டேலா இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் அவர். இப்படம் பெரிய எதிர்பார்ப்பை பற்ற வைத்தது. அறிவிப்பு வந்தபோதே ஆவலோடு இப்படத்தை பற்றிய பேச்சாகத்தான் எங்கும் இருந்தது. நீண்ட வருடங்கள் காத்திருந்த வெற்றி கண்டிப்பாக இப்படத்தில் வரும் என்றும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அறிவிப்புக்கு பிறகு அடுத்தக்கட்டத்தை நோக்கி அந்தப் படம் நகரவில்லை.
அறிமுக இயக்குநருடன்: மேலும் அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. அந்தப் படத்துக்கு பதிலாக போடி ராஜ்குமார் என்ற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் தனது 63ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகிவிட்டார். இதன் காரணமாக மடோன் அஷ்வினுடனான படம் ட்ராப்பாகிவிட்டதாக பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் அந்தப் படம் ட்ராப்பாகவில்லை; அதன் கதை தொடர்பான பணிகளை இயக்குநர் முடிக்காததால் 63ஆவது படத்தை முடித்துவிட்டு தனது 64ஆவது படமாக அதை விக்ரம் செய்வார் எனவும் தெரிகிறது. இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
விக்ரமின் போஸ்ட்: அவர் தனது லைன் அப் குறித்து போட்டிருக்கும் பதிவில், "சில நேரங்களில் அமைதியாக இருப்பது ஒரு புதிய தொடக்கத்திற்கான தயாரிப்பாக இருக்கும். இந்த வருடம் என்னை ஆழமாகத் தொட்ட கதைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இப்போது நான் மிகவும் மதிக்கும் இயக்குநர்களுடன், ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மை கொண்ட நான்கு புதிய படங்களை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பயணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலாக காத்திருக்கிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











