Vikram - விக்ரம்லாம் ஒரு நடிகரே கிடையாது.. பஞ்சாயத்தை கூட்டிய இயக்குநர்.. வெளுக்கும் ரசிகர்கள்
சென்னை: சியான் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விக்ரம் இந்திய அளவில் சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்தவர். அவரது நடிப்பில் கடைசியாக பொன்னியின் செல்வன் 2 வெளியானது. விரைவில் தங்கலான் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்த சூழலில் விக்ரம் குறித்து இயக்குநர் ராஜகுமாரன் பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
விக்ரம் பல போராட்டங்களை கடந்து சினிமாவில் வென்றவர். பாலா இயக்கத்தில் வெளியான சேது திரைப்படம் அவருக்கு வாழ்க்கை கொடுத்தது. அந்தப் படத்திலிருந்து விக்ரமின் திரை வாழ்க்கை ஆரம்பித்து இன்றுவரை சக்சஸ்ஃபுல்லாக போய்க்கொண்டிருக்கிறது. எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறிவிடும் வல்லமை கொண்டவர் விக்ரம். அதனாலேயே அவருக்கு மற்ற நடிகர்களின் ரசிகர்கள்கூட ரசிகர்களாக இருப்பார்கள். சொல்லப்போனால் குறைந்த அளவு ஹேட்டர்ஸ் கொண்ட ஒரே நடிகர் விக்ரம் மட்டும்தான்.

தங்கலான்: அவரது நடிப்பில் கடைசியாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியானது.அந்தப் படம் ஹிட் படமாக அமைந்தாலும் பலர் அதில் நடித்திருந்ததால் அந்த விக்ரமின் ஹிட் கணக்கில் மட்டும் சேராது. எனவே ஒரு சோலோ ஹிட் கொடுத்துவிட காத்திருக்கிறார் விக்ரம். அதனை தங்கலான் படம் பூர்த்தி செய்யும் என்று நம்பலாம். அப்படத்தை பா.இரஞ்சித் இயக்கியிருக்கிறார். விரைவில் படம் வெளியாகவிருக்கிறது. நிச்சயம் அப்படம் விக்ரமுக்கும், தமிழ் சினிமாவுக்கும் இன்னொரு அடையாளமாக இருக்கும். அதேபோல் தங்கலான் டீசர், மேக்கிங் வீடியோவை எல்லாம் பார்க்கும்போது விக்ரமின் உழைப்பும், நடிப்பும் பிரமிக்க வைக்கிறது.
ராஜகுமாரன் பேட்டி: இந்நிலையில் இயக்குநரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் விக்ரம் குறித்து பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், "விண்ணுக்கும் மண்ணுக்கும் விக்ரம் நடித்தபோது எனக்கும் அவருக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் படம் முடிந்த பிறகு இந்தப் படம் எனக்கு பிடிக்கவில்லை என்று அவர் சொல்லியிருக்கிறார். எதற்காக அவர் இப்படி சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை.
சேர்த்ததே விண்ணுக்கும் மண்ணுக்கும்தான்: விக்ரமை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு போய் சேர்த்ததே விண்ணுக்கும் மண்ணுக்கும் படம்தான். கையை ஒடித்துக்கொண்டு, காலை ஒடித்துக்கொண்டு, கண்ணை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு நடிப்பது எல்லாம் நடிப்பு இல்லை. இருக்கும் க்ளோசப்பில் எதுவுமே இல்லாமல் கட் சொல்லும்வரை நடிக்க வேண்டும். அவர்தான் நடிகர். விக்ரமால் அப்படி நடிக்கவே முடியாது.
சிறந்த நடிகர்லாம் இல்லை: விக்ரம் ஒரு சிறந்த நடிகர் என்று ஒத்துக்கொள்ளவே மாட்டேன். ஒன்று கமல் ஹாசன் மாதிரி நடிப்பார் இல்லை ரஜினிகாந்த் மாதிரி நடிப்பார். இதைத் தாண்டி அவருக்கு ஒரு நடிப்பும் தெரியாது. இந்த இரண்டையும் தாண்டி விக்ரம் நடித்தார் என்று பார்த்தீர்கள் என்றால் மீசையை எடுத்துக்கொண்டு, மொட்டை அடித்துக்கொண்டு, காலை உடைத்துக்கொண்டு, கையை உடைத்துக்கொண்டு நடந்து போக சொன்னால் நடந்து போவார்.
விக்ரமுக்கு தெரியாது: ஆனால் ப்ளெய்னா, மேக்கப்பே இல்லாமல் நின்ன இடத்தில் கட் சொல்லும் வரைக்கும் ஒரு நடிகராக என்ன ரியாக்ஷன் என்ன கொடுக்க வேண்டும் என்று விக்ரமுக்கு சுத்தமாக தெரியாது. எனது படத்தில் அவருக்கு அப்படியொரு பிரச்னை இருந்தது" என்றார். அவரது இந்தப் பேட்டியை ரசிகர்கள் ராஜகுமாரனை வெளுத்துவருகிறார்கள்.
அதாவது விக்ரமுக்கு நடிக்க தெரியாது என்று ராஜகுமாரன் சொல்லும் அளவுக்கு அவர் ஒன்றும் பெரிய இயக்குநர் கிடையாது. விக்ரமின் நடிப்பை இந்த நாடே கொண்டாடிவருகிறது. ஆனால் இவர் இப்போது இப்படி சொல்கிறார். விக்ரம் மீது தனிப்பட்ட கோபம் எதுவோ இருக்கிறதுபோல. அதனால்தான் அவர் விக்ரம் மீது இந்த வன்மத்தை கக்கியிருக்கிறார் என்று காட்டமாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











