Nani: ரசிகர்களுக்கு கை கொடுக்க மறுத்தாரா நானி? சர்ச்சையான வீடியோவும், ஆதரவாக வெளிவரும் ஆதாரங்களும்
ஹைதராபாத்: தென்னிந்திய சினிமாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் இருக்கும் நடிகர்கள் வேறு மொழிகளில் நடித்தாலும் அந்தந்த நடிகர்களின் நேட்டிவிட்டி படத்தின் ஏதாவது ஒரு காட்சியில் காட்டிக் கொடுத்துவிடும். சிலருக்கு அது படம் முழுவதும் அப்பட்டமாக தெரியும். ஆனால் அப்படியான உணர்வை கொஞ்சம் கூட ரசிகர்களுக்கு கொடுத்துவிடக் கூடாது என்று பார்த்து பார்த்து நடிக்கும் நடிகர் நானி.
அவரது பல படங்கள் ரசிகர்களுக்கு பெரும் நிறைவைக் கொடுத்துள்ளது. இது மட்டும் இல்லாமல் ஆக்ஷன், மசாலா என இப்படியான கமர்ஷியல் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் நடிகர். தெலுங்கு திரையுலகம் தான் இவர் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய திரையுலகம் என்றாலும், தெலுங்கில் மற்ற நடிகர்கள் எல்லாம் 1000 கோடிகளுக்கு தங்களது படங்கள் வசூல் ஆக வேண்டும் என்று பல திட்டங்களை போட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், அவர் மட்டும் தெளிந்த நீர் போல சீராக ஓடிக் கொண்டே இருக்கிறார்.

இவரது படங்கள் தெலுங்கு ரசிகர்களை கடந்து சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் படங்களாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக செயல்படுகிறார். தமிழ் சினிமா ரசிகர்களே பெருமளவுக்கு திரையில் கொண்டாடாத மெய்யழகன் படத்தை புகழ்ந்து தள்ளியவர் நானி. திரைத்துறையினர் மீதும், ரசிகர்கள் மீதும் எப்போதும் நன்மதிப்பு வைத்திருக்கும் நானி சமீபத்தில் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போது தன்னுடன் புகைப்படம் எடுத்த ரசிகர்கள் அவருக்கு கை கொடுக்க ஆசைப்பட்டனர். அதாவது அவருடன் கை குலுக்க ஆசைப்பட்டனர். ஆனால் நானி அதை தவிர்த்தார். வந்தவர்களை புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கச் சொல்லி அறிவுறுத்திவிட்டு, புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவ நெட்டிசன்கள் நானியை கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர். குறிப்பாக, ரசிகர்கள் ஆசையாக அன்பாக கை கொடுக்க நினைக்கிறார்கள், அவர்களுக்கு கை கொடுக்கலாமே ? அதில் என்ன பிரச்னை? அப்படி கொடுக்க முடியாது என்றால் எதற்காக ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதே நேரத்தில் ரசிகர்களின் தோள் மீது கை போட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். நெட்டிசன்களின் இந்த கமெண்ட்ஸைப் பார்த்த நானி ரசிகர்கள் பலர், நானி அனைவருக்கும் கை கொடுத்தார், வீடியோவை முழுதாக பாருங்கள், உங்கள் தேவைக்கு ஏற்ற வகையில் வெட்டிப் பரப்பாதீர்கள், என்று கூறி வருகிறார்கள். மேலும் ரசிகர்களுக்கு அவர் கை கொடுக்கும் வீடியோக்களையும் புகைப்படத்தையும் பகிர்ந்தும் வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications