டேஞ்சர்களுக்கு நடுவே தனுஷ்.. போர் தொழில் இயக்குநர் படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்.. கைவசம் இத்தனை படங்களா?
சென்னை: ஐசரி கணேஷ் தயாரிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள D54 படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பித்துவிட்டதாக நடிகர் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கோலிவுட்டில் இப்போதைக்கு எந்தவொரு நடிகரும் கைவசம் இத்தனை படங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்களா? என்றால் அதற்கு பதில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு காலத்தில் விஜய் சேதுபதி தொடர்ந்து பல படங்களை அடுக்கி வைத்து நடித்துக் கொண்டிருந்தார். அவரையெல்லாம் தற்போது தனுஷ் அதிரடியாக ஓவர்டேக் செய்துவிட்டார்.

இந்தி படத்தையும் இட்லி கடை படத்தையும் முடித்துக் கொடுத்துவிட்ட தனுஷ் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இன்று முதல் நடிக்க தொடங்கி விட்டார். தனுஷ் படத்தை இயக்க அடுத்தடுத்து எத்தனை இயக்குநர்கள் வரிசைக் கட்டி காத்துக்கிடக்கின்றனர் என்பது குறித்தும் இங்கே பார்க்கலாம் வாங்க..
போர் தொழில் இயக்குநர்: அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி வெளியான போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 20 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான அந்த படம் 50 கோடி ரூபாய் வரை வசூல் சாதனையை படைத்து வெற்றிப் பெற்றது. விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தை பார்த்து மிரண்டுப் போன தனுஷ் தனக்கும் ஒரு கதை ரெடி பண்ணுங்க என்றதுமே விக்னேஷ் ராஜா சொன்ன லைன் பிடித்துப் போக, ஐசரி கணேஷ் தயாரிப்பில் தனுஷை வைத்து இன்று முதல் படப்பிடிப்பை தொடங்குகிறார்.
டேஞ்சர்களுக்கு நடுவே தனுஷ்: இந்த ஆண்டு இயக்குநராக தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் பெரிதாக ஓடவில்லை. அடுத்து அவர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்த குபேரா திரைப்படம் தெலுங்கில் மட்டுமே சிறப்பாக ஓடியது. ஆனால், தமிழில் அந்த படத்தை ரசிகர்கள் பெரிதாக கொண்டாடவில்லை. அடுத்து அக்டோபர் 1ம் தேதி இட்லி கடை படம் வெளியாகிறது. இந்நிலையில், டேஞ்சர்களுக்கு நடுவே நிற்பதும் சில நேரங்களில் உயிர் பிழைக்க ஒரே காரணமாக இருக்கும் என்கிற சரியான பன்ச் லைன் உடன் கண்ணி வெடிகளுக்கு நடுவே தனுஷ் நிற்பது போன்ற ஒரு பக்காவான போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். மமிதா பைஜு தான் ஹீரோயின் என தகவல்கள் கசிந்துள்ளன.

அமரன் இயக்குநர் முதல் அப்துல் கலாம் பட இயக்குநர் வரை: தேரே இஷ்க் மெயின் மற்றும் இட்லி கடை படங்கள் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன. இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், அமரன் பட இயக்குநரான தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், ஓம் ராவத் இயக்கத்தில் இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகும் அப்துல் கலாமின் பயோபிக், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறனுடன் வடசென்னை 2, எச். வினோத் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக தனுஷ் கைவசம் இப்போதே பல படங்கள் உள்ளன. மேலும், அண்ணன் செல்வராகவனுடன் ஆயிரத்தில் ஒருவன் 2, இளையராஜா பயோபிக் எல்லாம் என்ன ஆனது என்றே தகவல்கள் வெளியாகவில்லை. நடிகர் தனுஷ் தொடர்ந்து கடுமையாக உழைத்துக் கொண்டே இருக்கிறார் என்று மட்டும் நன்றாக தெரிகிறது. அவரது உழைப்புக்கு கைமேல் நிச்சயம் பலன் கிடைக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











