சுசித்ரா அடுக்கிய மோசமான குற்றச்சாட்டுகள்.. ராயன் ஆடியோ லாஞ்சில் தரமான பதிலடி கொடுத்த தனுஷ்!
சென்னை: "நான் யாருன்னு எனக்குத் தெரியும், என் அப்பா, அம்மாவுக்குத் தெரியும், என் பசங்களுக்குத் தெரியும், என் ரசிகர்களுக்குத் தெரியும்" என நடிகர் தனுஷ் பேசியதும் அரங்கமே அதிர்ந்து போனது. ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு நடைபெற்ற நிலையில், வெள்ளை சட்டை மற்றும் வேட்டி அணிந்துக் கொண்டு அடங்காத அசுரனாக தனுஷ் உள்ளே என்ட்ரி கொடுக்கும் போதே ரசிகர்களின் சத்தம் விண்ணை கிழித்தது.
துள்ளுவதோ இளமை படத்தில் அப்பா இயக்கத்தில் அறிமுகமான தனுஷ் அடுத்ததாக அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நடித்தார். ஆரம்பத்தில் அதிகமாக கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளான தனுஷ், முதல் படத்திலேயே தான் சினிமாவை விட்டு ஓடி விடுவேன் என நினைத்தேன். ஆனால் எப்படி 50 படங்கள் பண்ணிவிட்டு உங்கள் முன் நிற்கிறேன் என்பது பெரிய ஆச்சரியமாகவே உள்ளது என பேசினார்.

திருடா திருடி திரைப்படம் தனுஷுக்கு கமர்ஷியல் நடிகராக வெற்றியை கொடுத்த நிலையில், தொடர்ந்து கமர்சியல் படங்களையும் நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களையும் மாறி மாறி நடித்து வந்த தனுஷ் ப. பாண்டி படத்தை தொடர்ந்து தற்போது ராயன் படத்திலும் இயக்குநராக மாறியுள்ளார்.
தனுஷின் 50-வது படம்: துள்ளுவதோ இளமை படத்தில் வயதுக்கு வந்த இளைஞராக நடித்த தனுஷ் 50-வது படத்தில் ஒரு தங்கை இரண்டு தம்பிகளுக்கு அண்ணனாக நடித்து அந்தப் படத்தை இயக்கி மாஸ் காட்டியுள்ளார். மொட்டை தலையுடன் வரும் ராயன் பத்து தலை ராவணனுக்கு சமமானவராக இருப்பார் என ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு நேற்று பிரம்மாண்டமாக ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
ஏ.ஆர். ரஹ்மான் சம்பவம்: இந்தியன் 2 படத்துக்கு ஏன் ரஹ்மான் இசையமைக்கவில்லை என ரசிகர்கள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இதே மாதம் வெளியாக உள்ள ராயன் படத்துக்கு தாறுமாறான இசையை ரஹ்மான் கொடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழா ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரி போலவே மாறியது. தனுஷும் அவரும் போட்டிப்போட்டு பாட அதை பார்த்த ரசிகர்களுக்கு இதைவிட ஒரு பெரிய ஆடியோ லான்ச் இருக்காது என கொண்டாடி வருகின்றனர்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: "நான் யாருன்னு எனக்குத் தெரியும், என் அப்பா, அம்மாவுக்குத் தெரியும், என் பசங்களுக்குத் தெரியும், என் ரசிகர்களுக்குத் தெரியும், ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக பாடி ஷேமிங்கிற்கு ஆளானவன் நான், தேவையில்லாத வதந்திகள், கெட்டப் பெயர், முதுகில் குத்தும் சம்பவம் என பல விஷயங்கள் நடந்தாலும், இன்னமும் நான் இப்படி உங்கள் முன் வந்து நிற்க காரணமே நீங்க தான்" என ரசிகர்கள் மத்தியில் பேசிய தனுஷ் தன்னைப் பற்றிய அவதூறு கருத்துக்கள் எல்லாம் வெறும் வதந்தி தான் என்பதை அழுத்தம் திருத்தமாக ரசிகர்களுக்கு புரியும்படி பேசியுள்ளார்.

போயஸ் கார்டனில் வீடு: "நான் போயஸ் கார்டனில் வீடு வாங்கக் கூடாதா? அது பெரிய குற்றம் போல பேசுகின்றனர்" என அந்த விஷயத்துக்கு நெத்தியடி பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் பாடகி சுசித்ரா நடிகர் தனுஷ் பற்றி ஏகப்பட்ட அவதூறு பேச்சுகள் பேசி வந்த நிலையில், அதற்கெல்லாம் தனுஷ் பதிலடி கொடுத்துள்ளார் என தனுஷ் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தனுஷின் பேச்சை டிரெண்ட் செய்து வருகின்றனர். ராயன் திரைப்படம் நிச்சயம் பெரிய வெற்றியை படைக்கும் என்றும் தனுஷ் யாருன்னு காட்டுறோம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











