ஒய் திஸ் கொலவெறி ஒரு சாபம்.. அவ்வளவு பெரிய ஹிட் பாடலை தனுஷ் இப்படி சொல்லிட்டாரே
சென்னை: தனுஷ் நடிப்பில் உருவான இட்லி கடை படத்தின் வெற்றியை தொடர்ந்து; அவரது நடிப்பில் தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் வரும் 28ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஆனந்த் எல்.ராய் இயக்கியிருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பெரிய எதிர்பார்ப்பை படம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தனுஷ் ஒய் திஸ் கொலவெறி பாடல் பற்றி பேசியிருக்கிறார்.
தனுஷ் இயக்கி நடித்திருந்த இட்லி கடை திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பெற்றது. அடுத்ததாக ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் நவம்பர் 28ஆம் தேதி ரிலீஸாகிறது. இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடிக்க; ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.
ராஞ்சனா மாதிரி வெற்றி பெறுமா?: முக்கியமாக ஆனந்த்தும், தனுஷும் சேர்ந்து ஏற்கனவே ராஞ்சனா படத்தை பணியாற்றியிருந்தார்கள். அப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி பாலிவுட்டில் தனுஷின் மார்க்கெட் உயர்வதற்கு காரணமாக இருந்தது. எனவே இப்படமும் அதுமாதிரியே ரிசல்ட்டை பெற்று அவரது மார்க்கெட்டை மேலும் உயர்த்துமா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்திருக்கிறது.

தனுஷின் பேச்சு: இந்நிலையில் துபாயில் நடந்த வாட்ச் வீக் நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், "நான் தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன். தமிழ் மொழி உலகின் மூத்த மொழிகளில் ஒன்று. 3 படத்தில் இடம்பெற்றிருந்த ஒய் திஸ் கொலவெறி பாடலை நாங்கள் விளையாட்டாகத்தான் உருவாக்கினோம். பாடலின் சிறு பகுதியை உருவாக்கிவிட்டு அதை நாங்கள் மறந்தேபோய்விட்டோம். வேறு ஒரு பாடலுக்காக நாங்கள் வேலை செய்யவும் ஆரம்பித்துவிட்டோம்.
வேடிக்கையாக இருந்தது: அப்போது எதிர்பாராத நேரத்தில் ஏற்கனவே ஒர்க் செய்திருந்த இந்தப் பாடலை சிஸ்டத்தில் பார்த்து என்ன இது என்று கேட்க ஆரம்பித்தோம். அது வேடிக்கையாக இருந்தது. எனவே வேடிக்கையானதுகூட ஒர்க் அவுட் ஆக வாய்ப்புகள் இருப்பதாக இசையமைப்பாளரிடம் சொன்னேன். பிறகுதான் அதனை முழு பாடலாக உருவாக்கினோம். இந்தப் பாடல் தமிழில் மட்டும்தான் பிரபலம் ஆகும் என்று நினைத்தேன். ஆனால் உலக அளவில் வெற்றி பெற்றது.
துரத்திக்கொண்டே இருக்கிறது: அந்தப் பாடலை விட்டு விலகி ஓடத்தான் நான்நினைக்கிறேன். ஆனால் அது என்னை துரத்திக்கொண்டே இருக்கிறது. அது வரமாகவும், சாபமாகவும் இருக்கிறது. இருந்தாலும் இப்படி ஒரு பாடலை உருவாக்கியது பெருமைதான்" என்றார். முன்னதாக இந்தப் பாடல்தான் அனிருத்தை முதல் படத்திலேயே பட்டித்தொட்டியெங்கும் ஃபேமஸ் ஆக்கிய பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்தப் பாடல் வெற்றிக்கு பிறகு தொட்ர்ந்து அதே ஸ்டைலில் பல பாடல்கள் வந்தன என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











