தனுஷ் நடிக்கும் கர.. ஈரான் போர் முதல் உள்ளூர் திருட்டு வரை.. பட்டையை கிளப்பும் ட்ரெய்லர்
சென்னை: தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கும் திரைப்படம் கர. இதில் தனுஷுடன் சுராஜ் வெஞ்சரமுடு, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படமானது ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் சூழலில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி மேற்கொண்டு ஹைப்பை ஏற்றி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வந்த படங்கள் எதுவும் நல்ல ஹிட்டை கொடுக்கவில்லை. எனவே தரமான ஹிட்டை கொடுத்துவிட வேண்டும் என்று புது புது இயக்குநர்களோடு வேலை செய்கிறார். அந்த வகையில் போர்த்தொழில் படத்தை இயக்கி மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர திரைப்படத்தில் கமிட்டானார். இதில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்ட்டர்நேஷனல் கம்பெனி தயாரித்திருகிறது.

முக்கியமான படம்: தனுஷுக்கு இது முக்கியமான படமாகும். ஏனெனில் கடந்த வருடத்தில் வெளியான தேரே இஷ்க் மெய்ன், இட்லி கடை, குபேரா ஆகிய மூன்று திரைப்படங்களுமே சுமார் வரவேற்பைதான் பெற்றன. இவற்றில் இட்லி கடை திரைப்படத்தை அவர்தான் இயக்கியிருந்தார். அது வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. முக்கியமாக அவர் ஒரு தியேட்டரிக்கல் ஹிட் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டன. கடைசியாக திருச்சிற்றம்பலம் திரைப்படம்தான் அவருக்கு அப்படி ஒரு இன்பத்தை கொடுத்தது.
கச்சிதமாக பொருத்தும்: இந்தப் படம் குறித்து விக்னேஷ் ராஜா சமீபத்தில் கொடுத்த பேட்டியில்கூட நம்பிக்கையோடே பேசியிருந்தார். அதுமட்டுமின்றி இந்தப் படத்தின் கதையில் ரூரல் டச்சும் இருப்பதால்; இந்த கதைக்கு தனுஷ் பக்காவாக பொருந்தி போயிருக்கிறார். ஜிவி பிரகாஷும் தனுஷுடன் ஐந்தாவது முறை சேர்ந்திருக்கிறார். இதுவரை அவர்கள் கூட்டணியில் வந்த பாடல்கள் எல்லாம் ஹிட். எனவே இதிலும் அப்படியே இருக்கும் என்று நம்புவோமாக. மமிதா பைஜூ ஹீரோயினாக நடித்திருக்கிறார். அவரை அந்த கெட்டப்பில் பார்ப்பதற்கு புதுமையாகவே இருந்ததாக ரசிகர்கள் ஃபீல் செய்தார்கள்.
படத்தின் ட்ரெய்லர்: படமானது ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே ஈரான் போரால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காட்டிவிட்டு படிப்படியாக கதைக்குள் செல்கிறார்கள். படத்தில் தனுஷ் திருடனாக நடித்திருக்கிறார் என்பது இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது. திருடன் ரோலை அவர் எவ்வாறு ப்ளே செய்திருப்பார் என்பதை பார்ப்பதும் சுவாரஸ்யமாக இருக்கும்.
படம் கண்டிப்பாக ஹிட்: ஜிவி பிரகாஷும் தன் பங்குக்கு இசையில் பட்டையை கிளப்பியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். சுராஜுக்கும், தனுஷுக்குமான மோதல், கே.எஸ்.ரவிக்குமாரின் வெகுளித்தனமான நடிப்பு, கருணாஸின் கச்சிதமான நடிப்பு என சரியான கலவையில் ட்ரெய்லர் பக்காவாக கட் செய்யப்பட்டிருக்கிறது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்களோ கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்க கூடிய அத்தனை விஷயங்களும் இதில் தெரிகின்றன என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
