நான் சொன்ன எதையுமே கென் கேட்கல.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ல 3 பொண்ணுங்க.. தனுஷ் ஓபன் டாக்!
சென்னை: கருப்பையா தயாரிப்பில் கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள 'யூத்' திரைப்படம் வரும் மார்ச் 19ம் தேதி வெளியாகிறது. அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. கருணாஸ், கிரேஸ் கருணாஸ், வெற்றிமாறன், ஜி.வி. பிரகாஷ் மற்றும் தனுஷ் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
ஒரு ரூபாய் கூட காசு வாங்காமல் ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு இசையமைத்தது குறித்து கருணாஸ் பாராட்டி பேசினார். மேலும், கர படத்திற்கு தனுஷுக்கு விருது கொடுத்தால் மத்திய அரசு தனக்கும் விருது கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கடைசியாக மேடையேறிய தனுஷ் தான் பேசுவதற்கு முன்னதாக கிரேஸ் கருணாஸை பேச அழைத்தார். தனது மகனுக்காக வெற்றி மற்றும் தனுஷ் செய்த உதவிகளை என்றைக்குமே மறக்கமாட்டோம் என கிரேஸ் கண்ணீர் மல்க பேசியது ஒட்டுமொத்த அரங்கையும் நெகிழ வைத்தது.
கண்ணீர் விட்ட கிரேஸ் கருணாஸ்: நடிகர் கருணாஸின் மனைவி கிரேஸ் கருணாஸ் தனது மகனின் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு வெற்றிமாறன், தனுஷ் எல்லாம் வருவார்கள் அவனுக்கு இந்தளவுக்கு சப்போர்ட் செய்வார்கள் என கனவில் கூட நினைக்கவில்லை என்றும் இப்போதான் ரொம்ப பயமா இருக்கு, எப்படியாவது கென் தனது முதல் படத்தில் வெற்றிப் பெற்றுவிட வேண்டும் என கண்ணீர் விட்டு பேசியது பலரையும் நெகிழ வைத்தது.
படிப்பை மட்டும் விட்டுட்டான்: அசுரன் படத்தில் கென் தான் எனக்கு மகன் என வெற்றி சொன்னதுமே, யாரு இவன் உருண்டையா இருக்கான். வேற ஆள பாருங்க வெற்றி என்றே சொல்லிவிட்டேன். ஆனால், வெற்றி தான் அவன் மீது நம்பிக்கை வைத்து படத்தின் ஷூட்டிங்குக்கு முன்பாக தயார்ப்படுத்திக் கொண்டு வந்தார். முதல் ஷாட்டை பார்த்த உடனே வெற்றியின் முடிவு சரியானது என்றும் செம கான்ஃபிடன்ட்டாக பண்றானே என வியந்தேன்.
சிதம்பரம் நம்மக்கிட்ட காடு இருந்தா புடுங்கிடுவானுங்க, காசு இருந்தா புடுங்கிடுவானுங்க.. படிப்பை மட்டும் என வசனம் பேசியிருந்தேன். ஆனால், படிப்பை மட்டும் விட்டுட்டு மத்தத எல்லாம் அடைஞ்சிட்டான் கென். முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே 3 பொண்ணுங்களோட போஸ் பார்த்து ஷாக் ஆகிட்டேன் என தனுஷ் செம கலாயாக பேசினார்.
நான் நம்பவே இல்லை: அசுரன் படத்தில் வெற்றி கென்னை நடிக்க வைக்கும் போது கூட இவன் அந்தளவுக்கு நல்லா நடிப்பான் என நான் நம்பவே இல்லை. திடீரென படம் பண்ணப் போறேன் என ஒரு நாள் வந்து சொன்னான். எதுக்குடா அவசரப்படுற, பொறுமையா இன்னும் சில படங்களில் அசிஸ்டன்ட்டா இருந்து கத்துக்கிட்டு பண்ணலாமேன்னு சொன்னேன். ஆனால், அதெல்லாம் பண்ணிடுவேன் என கான்ஃபிடன்ட்டா சொன்னான். அதே போல இப்போ படத்தை பண்ணி முடிச்சிட்டான்.
கென் கிட்ட கத்துக்கிட்டேன்: அப்போ எல்லாம் பெரிய நடிகர்களை பார்த்து பணிவை கத்துக்க சொல்வாங்க. ஆனால், இப்போ இருக்க புது ஜெனரேசன் கிட்ட வேகத்தை கத்துக்கணும். 24 வயசுல தயாரிப்பாளரை பார்த்து கதை சொல்லி, இத்தனை பேர் டீமையும் புடிச்சு ஒரு படத்தை பண்றது சாதாரண விஷயமில்லை. நானெல்லாம் ரொம்ப யோசிச்சு யோசிச்சே நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டேன்னு தோணுது. கென் கிட்ட இருந்து நான் அந்த வேகத்தை தான் கத்துக்கிட்டேன் என தனுஷ் பேச கென் நெகிழ்ந்து போய்விட்டார்.


Click it and Unblock the Notifications











