கருப்பு வசூலை காலி பண்ணுமா ஜன நாயகன்.. ஜூலை 16ல் வந்தால் இத்தனை படங்கள் நிலை என்ன ஆகும்?
சென்னை: பாலிவுட் சினிமா இந்த ஆண்டு துரந்தர் 2 படத்தின் மூலம் 1837 கோடி அளவுக்கு வசூல் ஈட்டியதாக சாக்னிக் உள்ளிட்ட பாக்ஸ் ஆபீஸ் சைட்டுகள் தகவல் தெரிவித்துளன. டோலிவுட்டில் இந்த ஆண்டு மிகப்பெரிய வசூல் வேட்டையை எந்தவொரு படமும் நிகழ்த்தவில்லை.
ராம் சரண் நடித்த பெத்தி திரைப்படம் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி 400 கோடி அளவுக்கு மட்டுமே ஈட்டியது என்றும் ஆனால், அந்த படம் பெரிதாக லாபம் ஈட்டவில்லை என்றும் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் இதுவரை வெளியான படங்களில் சூர்யாவின் கருப்பு படம் மட்டுமே 340 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே 190 கோடி வசூலை கருப்பு படம் ஈட்டியுள்ளது.
ஜூலை 16ல் ஜன நாயகன் வெளியாகுமா?: விஜய்யின் ஜன நாயகன் படம் வெளியாகவே வாய்ப்பில்லை என தளபதி ரசிகர்களே மனதை தேற்றிக் கொண்டிருந்த நிலையில், அவர்களை மீண்டும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது இன்று வெளியாகி உள்ள ஜன நாயகன் ரிலீஸ் தேதி தொடர்பான தகவல்கள். தணிக்கை குழு ஜன நாயகன் படத்துக்கு விரைவில் ஏ சான்றிதழ் வழங்கும் என்றும் ஜூலை 16ம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஜூலை 17 இத்தனை படங்கள் ரிலீஸ்: ஜூலை 3ம் தேதி இந்த வாரம் கட்டா குஸ்தி 2, டார்க், இரு முனை உள்ளிட்ட சில படங்கள் வெளியாகின்றன. அடுத்த வாரம் ஜூலை 10ம் தேதி இதயம் முரளி திரைப்படம் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. அந்த படத்தின் ரிலீஸுக்கு எதிராக சுதா கொங்கரா வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், ஜூலை 17ம் தேதியை குறிவைத்து பல புதியபடங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அன்பே டயானா, ஜி.டி. நாயுடு அருள்வான், அர்ஜுனன் பேர் பத்து, தி டார்க் எவன், பகவான், பிளாக் கோல்ட் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படமான ஓ சுகுமாரி உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆக திட்டமிட்டுள்ளன. மேலும், கிறிஸ்டோபர் நோலனின் 'ஒடிசி' படமும் வெளியாகிறது. இந்நிலையில், ஜன நாயகன் ஜனவரி 16 அல்லது 17ம் தேதி வெளியானால் இத்தனை படங்களின் ரிலீஸ் மாறும் அல்லது அதே நேரத்தில் வெளியானால் அந்த படங்களின் வசூல் அடிவாங்கும் என்கின்றனர்.
கருப்பு வசூலை முறியடிக்குமா?: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தை இதுவரை திருட்டுத்தனமாக 1.2 கோடி பேர் பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு வெளியான சூர்யாவின் கருப்பு திரைப்படம் 340 கோடி வசூலை ஈட்டி இதுவரை இந்த ஆண்டின் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபீஸ் வசூல் படமாக உள்ளது. இந்நிலையில், இந்த மாதம் ஜன நாயகன் வெளியானால் கருப்பு படத்தின் வசூலை முறியடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு வாய்ப்பே கிடையாது என சூர்யா ரசிகர்கள் விஜய் ரசிகர்களை ட்ரோல் செய்து வருகின்றனர். ஜூலைக்கு பதிலாக தில் இருந்தா ஆகஸ்ட் 14ம் தேதி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துடன் ஜன நாயகன் மோதட்டும் என்றும் சவால் விட்டு வருகின்றனர். ஜன நாயகன் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் அனைத்துக்கும் ஒரு முடிவு உண்டாகும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications