நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கில் விடுதலை.. திலீப்குமார் செம ஹேப்பி.. சத்தியம் வென்றதாக பூரிப்பு
திருவனந்தபுரம்: மலையாள நடிகைக்கு ஓடும் காரில் பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்குமார் குற்றவாளி இல்லை என்று இன்று நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் விசாரணை நடத்தப்பட்டு இந்த தீர்ப்பானது வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திலீப் மகிழ்ச்சியாக பேசி சத்தியம் வென்றதாக பூரித்து போனார்.
கேரளாவை சேர்ந்த நடிகை கடந்த 2017ஆம் ஆண்டு எர்ணாகுளத்திலிருந்து கொச்சிக்கு ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது முன்னாள் உதவியாளர் சுனில் உள்ளிட்டோர் சேர்ந்து அந்தக் காரினை வழிமறித்து தகராறு செய்தார்கள். அதோடு மட்டுமின்றி காருக்குள் இருந்த நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அதனை வீடியோவாகவும் எடுத்தார்கள். இரண்டு மணி நேரம் இந்த அக்கிரமம் நடந்திருந்தது.
புகார் அளித்த நடிகை: இந்த விவகாரம் நடிகைக்கு பெரிய மன உளைச்சலை கொடுத்தது. அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் ஷாக்காக்கியது. தொடர்ந்து நடிகை காவல் துறையில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசரணையை ஆரம்பித்த காவல் துறையினர்; பல்சர் சுனில் உள்ளிட்ட சிலரை கைது செய்தார்கள். சுனில் கைது செய்யப்பட்டதை அடுத்து நடிகர் திலீப்குமாருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதாக கூறப்பட்டது.

திலீப்பும் கைது: அதாவது நடிகையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும்படி நடிகர் திலீப்குமார்தான் தூண்டியதாக பேசப்பட்டது. இவ்விவகாரத்தில் பிரபலமான நடிகரின் பெயரும் அடிபட்டதால் இது மேற்கொண்டு பரபரப்பை கூட்டியது. அதனையடுத்து திலீப்பிடம் விசாரணை நடத்தி அவரையும் அதிரடியாக கைது செய்தது போலீஸ். திலீப் கைது செய்யப்பட விவகாரமும் ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனி நீதிபதி தீர்ப்பு: மொத்தம் 85 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்தார் அவர். இதற்கிடையே இவ்வழக்கை விசாரிக்க நீதிபதி ஹனி வர்கீஸை நியமித்தது கேரள நீதிமன்றம். 200க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் எட்டு ஆண்டுகள்வரை விசாரணை செய்த நீதிபதி இன்று தனது தீர்ப்பை வழங்கினார். அந்தத் தீர்ப்பில், நடிகர் திலீப்குமார் இந்த வழக்கில் குற்றவாளி இல்லை என்று குறிப்பிட்டார். இதனால் இவ்வ்வழக்கிலிருந்து திலீப் விடுதலையாகியிருக்கிறார். அவரது ரசிகர்களும், குடும்பத்தினரும் நிம்மதியில் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.
திலீப் பேட்டி: இந்நிலையில் இன்று தீர்ப்பு வந்ததை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திலீப்குமார், "சத்தியம் வென்றது. எனக்கு எதிராக காவல் துறையை சேர்ந்த சிலர் சதி செய்தார்கள். அந்த சதி இப்போது முறியடிக்கப்பட்டு உலகத்துக்கு உண்மை தெரியவந்திருக்கிறது. எனக்காக பிரார்த்தித்த கோடிக்கணக்கான பேருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும், கூடவே இருந்த அனைவருக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றி" என்று நெகிழ்ச்சியோடும், மகிழ்ச்சியோடும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











