கில் ரீமேக்கில் நடிக்கிறாரா துருவ் விக்ரம்?.. இயக்குநர் என்ன சொல்லிருக்காரு?.. சூப்பர் அப்டேட்
சென்னை: விக்ரமின் மகனான துருவ் விக்ரம் வர்மா படத்தில் மட்டும் இதுவரை நடித்திருக்கிறார். அந்தப் படத்தை முதலில் பாலாதான் இயக்கினார். ஆனால் அவரது இயக்கிய வெர்ஷனில் திருப்தி இல்லாததால் இன்னொருவரை வைத்து படம் இயக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இருப்பினும் படம் தோல்வியைத்தான் சந்தித்தது. இந்நிலையில் அவரது அடுத்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
இந்தியாவின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம். பல படங்களில் தனது திறமையை நிரூபித்து காண்பித்த அவருக்கு துருவ் என்ற மகன் இருக்கிறார். அவரும் தந்தையின் வழியில் நடிகராக வேண்டும் என்ற முடிவெடுத்து நடிகரானார். தனது திரை பயணத்தில் தனக்கு பெரிய திருப்பு முனையை கொடுத்த இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் தன்னுடைய மகனும் அறிமுகமாக வேண்டும் என்று விருப்பப்பட்டார் விக்ரம்.
அர்ஜுன் ரெட்டி ரீமேக்: அதன்படி தெலுங்கில் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. பாலா பொதுவாக ரீமேக் படங்களை இயக்கமாட்டார். ஆனால் விக்ரம் கேட்டுக்கொண்டதற்காகவும், விக்ரமின் மகனை சிறு வயதிலிருந்தே பார்த்து வருவதாலும்; அவர்களுக்காக ரீமேக் செய்ய ஒத்துக்கொண்டார். பாலாவின் இயக்கத்தில் அறிமுகமாவதால் கண்டிப்பாக பெரிய பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆரம்பமே பிரச்னைதான்: ஆனால் பாலா இயக்கிய வர்மா படத்தை பார்த்த விக்ரமும், தயாரிப்பாளர் தரப்பும் படம் தங்களுக்கு திருப்தி தரவில்லை என்று சொல்லி அந்த வெர்ஷனை பரணில் வைத்தது. இது அப்போதைக்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு இன்னொருவரை வைத்து ஆதித்ய வர்மா என்கிற பெயரில் மீண்டும் அப்படம் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த வெர்ஷனும் படுதோல்வியைத்தான் சந்தித்தது.
மகான் துருவ்: ஆதித்ய வர்மா படத்துக்கு பிறகு விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் நடித்தார் துருவ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த அந்தப் படம் ஓடிடியில் நேரடியாக வெளியானது. படத்தில் விக்ரமுக்கு இணையாக ஃபெர்ஃபார்ம் செய்து அசத்தியிருந்தார் துருவ். இருப்பினும் படம் சரியாக போகவில்லை. அதேசமயம் இப்படம் மட்டும் தியேட்டரில் வந்திருந்தால் கண்டிப்பாக வேறு மாதிரியான ரிசல்ட்டை பெற்றிருக்கும் என்ற கருத்துதான் பலருக்கும் நிலவியது. விஜய்யுமேகூட அதைத்தான் படத்தின் தயாரிப்பளரிடம் கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
பைசன்: இப்போது துருவ் விக்ரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் கபடி விளையாட்டை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. மாரியின் இயக்கத்தில் நடித்திருப்பதால் கண்டிப்பாக இது துருவ்வுக்கு ஒரு திருப்புமுனையாக அமையலாம் என்று கருதப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. இதற்கிடையே கில் படத்தின் ரீமேக்கில் துருவ் நடிக்கவிருப்பதாகவும்; அதனை ரமேஷ் வர்மா இயக்குவார் என்றும் சில நாட்களாக தகவல் ஓடியது.
இயக்குநரின் விளக்கம்: இந்நிலையில் இதுகுறித்து ரமேஷ் வர்மா கொடுத்திருக்கும் விளக்கத்தில், "கில் படத்தின் ரீமேக்கில் நான் துருவ்வுடன் இணைந்து பணியாற்றவில்லை. ஆனால் அவருடன் இன்னொரு படத்தில் பணியாற்றுகிறேன். அப்படத்தின் பணிகள் அடுத்த வருடம் தொடங்கும். காதல் கதையைத்தான் கையில் எடுத்திருக்கிறோம். அதேசமயம் கில் படத்தை ரீமேக் செய்யும் பிளானும் இருக்கிறது. ஆனால் அதில் துருவ் விக்ரம் நடிக்கமாட்டார். வேறு ஒரு நடிகர் நடிப்பார்" என்று தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











