நாக சைதன்யா - சோபிதா திருமணம் நடக்கவிருக்கும் இடம் எது தெரியுமா?.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவரது மகன் நாக சைதன்யாவும் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்துகொண்ட அவர்; சில வருடங்களுக்கு முன்பு அவரை விவாகரத்து செய்தார். சூழல் இப்படி இருக்க அடுத்ததாக அவர் சோபிதா துலிபாலாவை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்.
தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய குடும்பங்களில் ஒன்று நாகார்ஜுனா குடும்பம். நாகார்ஜுனா நடிகை அமலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். நாகார்ஜுனாவை போலவே அவரது மகன் நாக சைதன்யாவும் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். 2009ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமான நாக சைதன்யா கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தில் நடித்தார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் தண்டெல் படம் வெளியாகவிருக்கிறது.

திருமணம்: இதற்கிடையே விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது சமந்தாவை காதலிக்க ஆரம்பித்தார் சைதன்யா. அவர்களது காதலுக்கு இருவீட்டாரின் சம்மதம் கிடைத்ததை அடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் கோவாவில் திருமணம் செய்துகொண்டனர். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா தெலுங்கு தேசத்தில் பெரிய வீட்டு மருமகளாக மாறினார்.
தொடர்ந்து சினிமாவில்: திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதற்கு நாக சைதன்யாவும் முழு சப்போர்ட்டாக இருந்தார். அதேசமயம் சமந்தா சினிமாவில் நடிப்பதை நாகார்ஜுனாவும், அமலாவும் விரும்பவில்லை என்றும் ஒரு தகவல் அரசல் புரசலாக ஓடியது. இருந்தாலும் சமந்தா முழுக்க முழுக்க சினிமாவில் கவனம் செலுத்திக்கொண்டே இருந்தார்.
பிரிவு: நிலைமை இப்படி இருக்க கடந்த 2021ஆம் ஆண்டு நாக சைதன்யாவும் - சமந்தாவும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். அதற்கு காரணம் சமந்தா நடித்ததுதான் என்று இன்றளவும் பேச்சு இருக்கிறது. ஆனால் சைதன்யாவோ, சமந்தாவோ அதற்கான காரணத்தை வெளியே சொல்லவில்லை. விவாகரத்துக்கு பிறகும் சமந்தாவின் கரியர் பீக்கில்தான் சென்றுகொண்டிருந்தது. ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்தது. அதிலிருந்து இப்போது மீண்டிருக்கும் அவர் மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருக்கிறார்.
அடுத்த காதல்: இருவரும் பிரிந்த பிறகு அவரவர்கள் தங்களது பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.இந்தச் சூழலில் அவர் நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்துவந்தார். அவர்களுடைய நிச்சயதார்த்தம் சில வாரங்களுக்கு முன்னர் சிம்ப்பிளாக நடந்து முடிந்தது. அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.
எங்கு திருமணம்: அவர்களின் நிச்சயதார்த்தம் குறித்து பேசிய நாகார்ஜுனா, இருவரும் திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்தார்கள். அதன் காரணமாகத்தான் உடனடியாக நிச்சயத்தை முடித்தோம் என்று கூறினார். இந்நிலையில் அவர்களது திருமணம் நடைபெறும் இடம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமாக திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்திருப்பதாகவும், திருமண தேதி குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











