முதலமைச்சர் விஜய் பெயரில் புது விருது.. யார் யாருக்கெல்லாம் எடிசன் விருதுகள் கிடைத்தன?
சென்னை: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 18வது எடிசன் திரைப்பட விருதுகள் 2026 விழா நேற்று (மே 24) வெகு சிறப்பாக நடைபெற்றது. 2025ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை கவுரவிக்கும் இந்த விழாவில், நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறையினர் பல்வேறு பிரிவுகளில் பாராட்டப்பட்டனர்.
இந்த பிரம்மாண்டமான நிகழ்வில், மலேசிய துணை அமைச்சர் ராமராஜ், ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர், ஸ்பெயின் நாடுகளின் தூதர்கள், அத்துடன் முன்னணி தொழிலதிபர்களான ஏ2பி சீனிவாசன், லீமா ரோஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பெயரில் ஒரு புதிய விருது அறிமுகப்படுத்தப்பட்டது. இது குறித்து அறிவித்த எடிசன் விருதுகளின் சேர்மன் செல்வகுமார், அடுத்த ஆண்டு முதல் விஜய் பெயரில் ஒரு சிறப்பு விருது அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டு, எடிசன் திரைப்பட விருதுகள் விழாவில் வழங்கப்படும் என்று கூறினார்.
மேலும், 'எடிசன் மில்லியனரி கிளப்' என்ற புதிய திட்டமும் இந்த விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. எடிசன் விருதுகளின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி செல்வகுமார் பேசுகையில், இந்த அமைப்பு உலகின் பல நாடுகளில் விருதுகளை விரிவுபடுத்துவதற்கும், உலகளாவிய தொழிலதிபர்களை ஒன்றிணைப்பதற்கும் ஒரு தளமாக அமையும் என்று குறிப்பிட்டார். இதன் மூலம் தமிழ் சினிமாவை உலக அளவில் உயர்த்தவும், சர்வதேச தொடர்புகளை அதிகரிக்கவும் முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த ஆண்டின் முக்கிய விருதுகளில், 'பைசன்' திரைப்படத்திற்காக துருவ் விக்ரம் சிறந்த நடிகர் விருதை வென்றார். அதே படத்திற்காக மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றார். 'ஆண் பாவம் பொல்லாதது' படத்தில் நடித்த ரியோ ராஜ், சிறந்த பொழுதுபோக்கு நடிகருக்கான விருதினைத் தட்டிச் சென்றார். பின்னணிப் பாடகர்களில், 'டிராகன்' திரைப்படத்தின் 'வழித்துணையே...' பாடலுக்காக சஞ்சனா கல்மன்ஜே சிறந்த பெண் பின்னணிப் பாடகியாகவும், 'மதராசி' திரைப்படத்தின் 'தங்கப்பூவே...' பாடலுக்காக ரவி ஜி சிறந்த ஆண் பின்னணிப் பாடகராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
'மாமன்' திரைப்படத்தில் நடித்த ஸ்வாசிகா சிறந்த கதாபாத்திர நடிகை விருதைப் பெற்றார். 'குட் பேட் அக்லி' படத்திற்காக விஜய் வேலுக்குட்டி சிறந்த எடிட்டர் விருதையும், அர்ஜுன் தாஸ் சிறந்த வில்லன் நடிகர் விருதையும் வென்றனர். இளம் கலைஞர்களில், பவிஷ் நாராயண் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்காக சிறந்த அறிமுக நடிகர் விருதையும், அனிஷ்மா அனில்குமார் 'சிறை' படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை விருதையும் வென்றனர்.
ஜூரி விருதுகள் பிரிவில் இந்தியாவின் பல முக்கிய கலைஞர்களுக்குக் கௌரவம் அளிக்கப்பட்டது. நடிகர் டத்தோ ராதாரவிக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது. நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், 'பீனிக்ஸ்' மற்றும் 'தி வெர்டிக்ட்' ஆகிய திரைப்படங்களுக்காக 'டைனமிக் பெர்ஃபார்மர் விருது' பெற்றார். இந்த விருதினை அவரது தாய் சாயா பெற்றுக்கொண்டார்.
பாடகி சைந்தவிக்கு 'தி வாய்ஸ் பியாண்ட் பவுண்டரிஸ்' விருது வழங்கப்பட்டது. நாட்டுப்புறப் பாடகர் அந்தோணி தாசன் 'வாய்ஸ் ஆஃப் டிரெடிஷன்' விருதை வென்றார். மூத்த நடிகர் தம்பி ராமையா, 'முதல் பக்கம்' திரைப்படத்திற்காக 'வெட்ரன் பர்ஃபாமெர் அவார்ட்' பெற்றார்.
விருதுகளைப் பெற்ற கலைஞர்கள் பலரும், எடிசன் விருதுகள் தலைவர் செல்வகுமார் மற்றும் நடுவர் குழுவினருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். இந்த அங்கீகாரம் தங்களது கலைப் பயணத்தில் ஒரு மிக முக்கியமான மைல்கல் என்றும், தொடர்ந்து திரைப்படத் திறமைகளை அங்கீகரித்து வரும் எடிசன் விருதுகள் குறித்து பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டனர்.
உலக அரங்கில் தமிழ் சினிமாவின் சாதனைகளையும், அதன் சிறப்பையும் இந்த ஆண்டின் எடிசன் திரைப்பட விருதுகள் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக எடுத்துக்காட்டியுள்ளன. அத்துடன், உலகளாவிய அளவில் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கான புதிய பாதைகளையும் இவை திறந்துவிட்டுள்ளன.


Click it and Unblock the Notifications