போதை பொருள் வழக்கு.. கைது செய்யப்பட்ட கிருஷ்ணாவுக்கு எதிரான ஆதாரங்கள் இவைதான்.. விவரம் இதோ
சென்னை: தடை செய்யப்பட்ட கொக்கைன் போதை பொருளை பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரின் கைதை தொடர்ந்து மேலும் பல கோலிவுட் நடிகர்கள் இந்த விவகாரத்தில் சிக்கலாம் என்றே பலராலும் பேசப்படுகிறது. இந்நிலையில் கிருஷ்ணாவுக்கு எதிரான ஆதாரங்கள் குறித்து காவல் துறை அறிக்கை வெளியிட்டு விளக்கமளித்திருக்கிறது.
கொக்கைன் போதை பொருளை பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். முதலில் தான் போதை பொருளே பயன்படுத்தவில்லை என்று அவர் கூறியிருந்தார். அதனையடுத்து அவரை மருத்துவ சோதனை செய்ததில் அவர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானது. அதனையடுத்து நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் ஸ்ரீகாந்த். ஆனால் நீதிபதியோ ஜாமீன் தருவதற்கு மறுத்துவிட்டார்.
கிருஷ்ணாவும் கைது: இதற்கிடையே இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருப்பதாக பேச்சுக்கள் ஓடின. அவருக்கு காவல் துறையினர் சம்மன் அனுப்பியதை அடுத்து நேற்று தனது வழக்கறிஞருடன் ஆஜரானார். அவரும் விசாரணையின்போது, 'தான் போதை பொருள் பயன்படுத்த வாய்ப்பே இல்லை. தனக்கு உடல்நிலை பிரச்னை இருக்கிறது' என்று சொல்லியிருந்தார். சூழல் இப்படி இருக்க அவரும் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானதால் கைது செய்யப்பட்டார்.

காவல் துறை அறிக்கை: இந்நிலையில் இதுகுறித்து காவல் துறை தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், "சென்னை பெருநகர காவல் - கிழக்கு மண்டலம் திருவல்லிக்கேணி மாவட்டம் -நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரவு விடுதியில் கடந்த 22.05.2025ம் தேதி அன்று மது அருந்தச்சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்களின் காரணமாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 1 வழக்கில் 1 எதிரியும், 2-வது வழக்கில் 7 எதிரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரதீப்குமார். கானா நாட்டைச்சேர்ந்த ஜான், பிரசாத் மற்றும் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து போதைப்பொருட்கள் வாங்கி, பயன்படுத்தி, நண்பர்களுக்கும் அளித்த ஸ்ரீகிருஷ்ணா என்பவரும், போதைப்பொருட்கள் வாங்கி, பயன்படுத்தி விற்பனை செய்யும் கெவின் என்பவரும் உரிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவையெல்லம் கைப்பற்றப்பட்டன: இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள எதிரிகளையும், தேடப்பட்டு வந்த நிலையில், தொடர் புலன் விசாரணையின் நிகழ்வாக, அறிவியல் பூர்வமாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும், சாட்சிகள், ஆதாரங்கள் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் பேரில் ஜெஸ்வீர் (எ) கெவின் என்பவர் இன்று ( 26.06.2025) ம் தேதி (1) Cocaine 1/2 Grams, 2)Methamphetamine -10.30 Grams, 3)MDMA 02.75 grams, 4) OG Ganja 2.40 grams, 5) Ganja 30 grams, 6) OC Paper 40 grams, 7) Ziplock Cover-40 Grams, 8) Weight Machine Small-2, 9) laptop-1, 10) Cellphone-1, 11) Rs.45,200 கைப்பற்றப்பட்டுள்ளது.
இவைதான் ஆதாரம்: இதில் ஸ்ரீ கிருஷ்ணா என்பவர், கெவின் என்பவரிடமிருந்து போதைப்பொருளை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் உடையவர். அதை அவர் நண்பர்களுடன் இணைந்து, பகிர்ந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளவராக இருக்கிறார். மேலும் போதைப்பொருள் உட்கொள்பவருடன் WhatsApp குழுக்களில் இணைந்து அது சம்மந்தமாக கருத்து பரிமாற்றங்களில், போதைப்பொருள் உட்கொள்ளும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை பகிர்ந்துள்ளார்.
இவர்களுடைய வங்கி பணப்பரிவர்த்தனை மற்றும் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள், விசாரணை சாட்சியங்கள், தொழில் நுட்ப ஆதாரங்கள் அடிப்படையில் ஸ்ரீகிருஷ்ணா மற்றும் கெவின் ஆகிய இருவரும் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொக்கைன், ஓஜி கஞ்சா மற்றும் பிற போதைப்பொருளை கடத்துவது, தன் வசம் வைத்திருப்பதும், உட்கொள்வதும், மற்றவர்களுக்கு கொடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். போதைப்பொருளை வைத்திருப்பவர்களை பற்றிய தகவல் தெரிந்தும், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இருப்பது குற்றமாக கருதப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











