Dhanush: இவ்வளவு பிஸியிலும் ரசிகர்களைச் சந்தித்த தனுஷ்.. அவங்கதானே அவருக்கு எல்லாம்!
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள கர படம் வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். அவரது முந்தைய படமான போர் தொழில் படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் இரண்டாவது படமான கர படமும் பெரும் வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தனுஷ் தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55 வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் மம்முட்டி, சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் தனுஷ் தனது ரசிகர்களை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் தனுஷ் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் சினிமாவில் நடிகராக, இயக்குநராக, பாடலாசிரியராக, பாடகராக, கதையாசிரியராக, தயாரிப்பாளராக ஜொலித்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் ஒரு சகலகலா வல்லவனாக ஜொலித்து வருகிறார். 54 படங்கள் இவரது நடிப்பில் வெளியாகி உள்ளது. இதில் மூன்று படங்கள் நேரடியாக இந்தி படங்களாக வெளியாகி உள்ளது. இரண்டு படங்கள் நேரடியாக தெலுங்கு படங்களாக வெளியாகி உள்ளது. ஒரு ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.
ரசிகர்கள் சந்திப்பு: இவரது 56வது படம் இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளது. இப்படி இருக்கையில் நடிகர் தனுஷ் தனது ரசிகர்களை சந்தித்து பேசி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அதுவும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த ஈரோடு, திருப்பூர், நாமக்கல், ஒசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ரசிகர்களைச் சந்தித்துள்ளார். சுமார் 3500 ரசிகர்களுக்கு பிரியாணி, புடவைகள், குழந்தைகளுக்கு பள்ளி பேக் ஆகியவை இந்த சந்திப்பின் போது வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுடன் விளையாட்டு: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார் தனுஷ். மேலும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் அனைவரிடமும் அனைவரையும் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று அன்புக் கட்டளையை இட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியாக தனுஷ் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். குடும்பம் குடும்பமாக வந்த ரசிகர்களின் குழந்தைகளுக்கு பள்ளி பேக் கொடுத்தது மட்டுமல்லாமல், சாக்லெட் கொடுத்து அவர்களுடன் விளையாடவும் செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











