2023ல் ரசிகர்களை வென்ற நம்பர் ஒன் நடிகர் யார்?.. ரஜினிகாந்தை ஓரங்கட்டி முதலிடத்தை பிடித்த விஜய்!
சென்னை: 2023ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய ஆண்டாகவே மாறியது. பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் தியேட்டர்கள் திருவிழாக் கோலம் பூண்டன. ரசிகர்கள் தீபாவளி பண்டிகையை போல பட்டாசு வெடிப்பது, டிஜே வைப்பது என அலப்பறையை கிளப்ப ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியானால் தான் உண்டு என்கிற நிலைமை தான் கடந்த ஆண்டும் இருந்தது. அதில், அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த ஹீரோ யார் என்கிற கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
தமிழ் சினிமாவுக்கு கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 900 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஏற்படுத்திக் கொடுத்த நடிகர் விஜய் தான் நம்பர் ஒன் ஃபேவரைட் நடிகர் என பிலிமிபீட் நடத்திய கருத்துக் கணிப்பில் மக்கள் வாக்களித்துள்ளனர். அதன் அடிப்படையில் விஜய் முதலிடத்தையும் ரஜினிகாந்த் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். அஜித் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் எந்த இடத்தை பிடித்துள்ளனர். ரஜினிகாந்த் மற்றும் விஜய் இடையே எத்தனை சதவீதம் வித்தியாசம் என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க!

சினிமாவுக்கு சூப்பரான ஆண்டு: பாலிவுட் முதல் கோலிவுட் வரை கடந்த ஆண்டு சினிமாவுக்கு சூப்பரான ஆண்டாகவே இருந்தது. பாலிவுட்டில் ஷாருக்கான் மட்டுமே 2400 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஈட்டி ஒட்டுமொத்தமாக 4000 கோடி வசூலை பாலிவுட் ஈட்ட உதவி செய்திருந்தார். கதர் 2, அனிமல், டைகர் 3, ஆதிபுருஷ் மற்றும் OMG2 உள்ளிட்ட படங்கள் வசூல் வேட்டை நடத்தின.
அதே போல தமிழ் சினிமாவில் ஜெயிலர், லியோ, பொன்னியின் செல்வன், வாரிசு, துணிவு, வாத்தி, மாவீரன், மார்க் ஆண்டனி, போர் தொழில், மாமன்னன், டாடா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று கோலிவுட் கஜானாவை நல்லாவே நிரப்பின. அதில், நடிகர் விஜய்யின் வாரிசு படம் 300 கோடி வசூலையும் லியோ படம் 600 கோடி வசூல் என ஒட்டுமொத்தமாக 900 கோடி வசூலுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.
நம்பர் ஒன் விஜய்: ஒன் இந்தியா தமிழ் மற்றும் பிலிமிபீட் நடத்திய 2023ல் உங்களை மிகவும் கவர்ந்த நடிகர் யார்? என்கிற கருத்துக் கணிப்பில் அதிகப்படியான ரசிகர்கள் பங்கேற்று வாக்குகளை செலுத்தினர். அதில், 26.4 சதவீத ஓட்டுக்களுடன் நடிகர் விஜய் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என அவரது அடுத்த படத்துக்கு சரியான தலைப்பை தான் வெங்கட் பிரபு வைத்திருக்கிறார்.

2வது இடத்தில் ரஜினிகாந்த்: இந்த கருத்துக் கணிப்பில் இரண்டாவது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளார். அவருக்கும் நடிகர் விஜய்க்கும் சிறிய அளவிலான வாக்கு வித்தியாசம் தான். ஜெயிலர் எனும் ஒரே படத்தில் 600 கோடி வசூல் செய்து 72 வயதிலும் மாஸ் காட்டியுள்ளார் நம்ம ஸ்டைல் சாம்ராட். 24.13 சதவீத வாக்குகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார்.
3வது இடத்தில் அஜித் குமார்: கடந்த ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படத்துடன் துணிவு படத்தை கிளாஷுக்கு விட்டிருந்தார் நடிகர் அஜித். 200 கோடி வரை அந்த படம் வசூல் ஈட்டியது. அஜித் படம் வரவில்லை என்றாலும் ஆன்லைனில் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு வாக்குகளை செலுத்தாமல் இருக்குமா? 21.12 சதவீதம் பேர் அஜித்துக்கு ஓட்டுப் போட்டு 3வது இடத்தில் வைத்திருக்கின்றனர்.
கவின் கலக்கல்: முன்னணி நடிகர்களான விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரை பின்னுக்குத் தள்ளி விட்டு கடந்த ஆண்டு அதிக வாக்குகளை நடிகர் கவின் பெற்றுள்ளது மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 12.9 சதவீத ஓட்டுக்களுடன் கவின் 4வது இடத்தை பிடித்துள்ளார். 4.37 சதவீத ஓட்டுக்களுடன் விக்ரம் 5வது இடத்தையும், 4.9 சதவீத ஓட்டுக்களுடன் சிவகார்த்திகேயன் 6வது இடத்தையும், 3.37 சதவீத வாக்குகளுடன் தனுஷ் 7வது இடத்தையும் 3.32 சதவீத வாக்குகளுடன் 8வது இடத்தை நடிகர் சிம்புவும் பிடித்துள்ளார். இந்த ஆண்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, கவின் உள்ளிட்டோர் படங்கள் வெளியாக உள்ள நிலையில், எந்த அளவுக்கு மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை காண காத்திருப்போம்!


Click it and Unblock the Notifications











