அஜித்திடம் மட்டும்தான் அந்த குணம் இருக்கிறது.. ஆரவ்வை காப்பாற்ற நினைத்தார்.. பெப்சி விஜயன் ஓபன் டாக்
சென்னை: அஜித் கடைசியாக துணிவு படத்தில் நடித்தார். அதற்கு அடுத்து விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியிருக்கிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கோலிவுட்டின் கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவர் மகிழ் திருமேனி என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. தற்போது அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
கோலிவுட்டில் அதிகம் வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் ஒருவர் அஜித்குமார். ஏகே என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் கடைசியாக துணிவு படத்தில் நடித்தார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் திரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். துணிவு படம் எப்படி ஹிட் ஆனதோ அதேபோன்றொரு வெற்றியை கண்டிப்பாக விடாமுயற்சி திரைப்படமும் பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அஜித்குமார்.

அடுத்த லொக்கேஷன் எங்கே?: அதேபோல் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக எங்கு ஷூட்டிங் நடக்கும் என்று கேள்வி எழுந்தது. அதன்படி ஒன்று சென்னையில் செட் போட்டு படமாக்குவார்கள் இல்லை ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டிக்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர மகிழ் திருமேனி முழு மூச்சோடு வேலை செய்துவருவதாகவும் ஒரு பேச்சு ஓடியது. ஆனால் சில வாரங்களுக்கு முன்பு அஜித்துக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் விடாமுயற்சியின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் இருந்தது.
விரைவில் ஷூட்டிங்: இப்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இன்னும் சில வாரங்களில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என்றும்; இதனை ஒரேகட்டமாக முடிக்க மகிழ் திருமேனி திட்டமிட்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. சூழல் இப்படி இருக்க ஆரவ் உள்ளிட்டோரை அழைத்துக்கொண்டு அஜித்குமார் பைக் டூர் சென்றிருக்கிறார். இதற்கிடையே விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் அஜித்தும், ஆரவ்வும் கார் விபத்தில் சிக்கிய வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருந்தது.
போல்டு அஜித்: திரைத்துறையில் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அதில் பயணப்பட்டுக்கொண்டிருப்பவர் அஜித். பத்திரிகையாளர்களை சந்திக்கமாட்டார், ரசிகர்களை சந்திக்கமாட்டார், பட ப்ரோமோஷன்களில் கலந்துகொள்ளமாட்டார். இவை அனைத்துக்கும் பட தயாரிப்பு நிறுவனம் ஓகே சொன்னால்தான் படத்தில் நடிக்கவே ஒத்துக்கொள்வார். இதனாலேயே அஜித்துக்கான மவுசு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது.
பெப்சி விஜயன் பேட்டி: இந்நிலையில் பெப்சி விஜயன் அஜித் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசுகையில், "ஒரு ஃபைட் சீன் முடிந்ததும் கீழே விழுந்து கிடக்கும் ஸ்டண்ட் கலைஞர்களை கை கொடுத்து தூக்கிவிடும் ஒரே நடிகர் அஜித் மட்டும்தான். ஏனெனில் வலி என்றால் என்ன என்பதை அவர் சரியாக புரிந்து வைத்திருப்பவர். வில்லன் பட ஷூட்டிங்கின்போது சண்டைக் காட்சியில் எனது நெற்றியில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது.
முடியவே முடியாது: கண்ணாடி குத்தியதால் வந்த காயம் அது. உடனே நான் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று தையல் போட்டுக்கொண்டு நடிக்க வந்தேன். ஆனால் அஜித்தோ, ஐய்யயோ இரத்தம் எந்த அளவுக்கு வந்திருக்கிறது. அதே வலியுடன் நடிப்பது சாத்தியப்படாது. என்னால் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார். அந்த அளவுக்கு பிறரின் வலியை புரிந்து வைத்திருப்பவர் அஜித்.
காப்பாற்ற நினைத்தார்: சமீபத்தில் விடாமுயற்சி ஷூட்டிங்கில் நடந்த விபத்து வீடியோவை பார்த்தேன். அதில், ஆரவ்வை எப்படியாவது பத்திரமாக கொண்டு போக வேண்டும் என்பதிலேயே அஜித் குறியாக இருந்தார். அது அவரது கண்களில் தெரிந்தது. மற்றபடி அவருக்கு பயம் என்பதே கிடையாது. ரொம்ப ரொம்ப தில்லான மனிதர்" என்றார்.


Click it and Unblock the Notifications











