பிறந்த நாள் கேக்கை ஹீரோ வாளால் வெட்டிய விவகாரம்.. முதல்ல நோட்டீஸ்.. இப்ப வழக்குப் பதிவு
பெங்களூரு: பிறந்த நாள் கேக்கை வாளால் வெட்டி, போஸ் கொடுத்த பிரபல ஹீரோவுக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வாள், அரிவாளால் பிறந்த நாள் கேக் வெட்டுவது சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. பிரபல ரவுடி பினு கடந்த சில வருடங்களுக்கு முன் இப்படி வாளால் கேக் வெட்டி, பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் அவரை மடக்கிப் பிடித்தது போலீஸ்.
இதைப் பின்பற்றி வாளால் கேக் வெட்டும் சம்பவங்கள் தொடர்கின்றன. அப்படி பர்த் டே கொண்டாடியவர்களை வாரி அள்ளி வருகிறது போலீஸ்.

சர்ச்சை நாயகன்
இப்போது இந்த ஸ்டைல் பெங்களூருக்குப் பரவியிருக்கிறது. அங்கு இப்படி பர்த் டே கொண்டாடி இருப்பது பிரபல கன்னட ஹீரோ துனியா விஜய். சர்ச்சைக்கும் இவருக்கும் அவ்வளவு பொருத்தம். ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டே இருப்பார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில், பெங்களூர் ஹோசரஹள்ளியில் உள்ள வீட்டில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் துனியா விஜய்.

ஆக்ஷன் படங்கள்
இவர், சுதீப்பின் ரங்கா எஸ்எஸ்எல்சி என்ற படம் மூலம் நடிகரானவர். இவர் நடித்த துனியா படம் சூப்பர் ஹிட்டானதால், இவரது பெயருக்கு முன், துனியா சேர்ந்துகொண்டது. தொடர்ந்து கெலேயா, சந்தா, அவ்வா, ஜங்கிளி, சங்கர் ஐபிஎஸ், கண்டீரவா, வீரபாபு உட்பட பல படங்களில் நடித்தார். ஆக்ஷன் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.

நோட்டீஸ்
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாளுக்காகக் கொண்டு வரப்பட்ட கேக்கை, வாளால் வெட்டி கொண்டாடினார். கையில் வாளை ஸ்டைலாக வைத்தபடி அவர் கேக் வெட்டிய வீடியோ, இணையத்தில் வைரலானது. இது பரபரப்பானதை அடுத்து கிரிநகர் போலீசாருக்கு தகவல் சென்றது. அவர்கள் வாளால் கேக் வெட்டியதற்கு விளக்கம் கேட்டு, நடிகர் துனியா விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பினர்.
Recommended Video

மன்னிப்புக் கேட்டார்
இதற்கிடையே தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டிருந்தார் துனியா விஜய். இந்நிலையில் அந்தப் பகுதியில், போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தினார் என்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பிறகும் ஸ்பீக்கர் பயன்படுத்தி, சத்தத்தை ஏற்படுத்தியதாகவும் துனியா விஜய் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த மதுசூதன் என்பவர் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது கிரிநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











