GOAT: கோட் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்... விஜய்யின் அதிரடி முடிவு... எல்லாம் அரசியலுக்காக தான்!
சென்னை: விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம், ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால், கோட் ரிலீஸில் திடீரென மாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோட் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்
லியோவை தொடர்ந்து தனது 68வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். அதன்படி ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தின் டைட்டில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என அறிவிக்கப்பட்டது. விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, ஜெயராம், யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ் என பெரிய நட்சத்திரக் கூட்டணியே இப்படத்தில் நடித்து வருகிறது.

கோட் படத்தின் படப்பிடிப்பு பிரேக் இல்லாமல் அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி மறைவு காரணமாக கோட் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. வெங்கட் பிரபு, யுவன் இருவரும் தங்களது சகோதரியை இழந்துவிட்ட சோகத்தில் இருந்தனர். இதனையடுத்து தற்போது கோட் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே யுவன் சங்கர் ராஜாவும் கோட் படத்தின் பாடல்கள் குறித்து அப்டேட் கொடுத்திருந்தார். இனி பேச்சே கிடையாது வீச்சு தான் என ரஜினி ஸ்டைலில் பஞ்ச் அடித்தார். இதனால் விரைவில் கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என சொல்லப்பட்டது. அதேபோல் படமும் ஜூன் மாதம் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து கோலிவுட்டில் இருந்து அடிக்கடி தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன.
இன்னொரு பக்கம் விஜய் திடீரென அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். மேலும், தனது கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதோடு இன்னும் ஒரு படம் மட்டுமே நடிப்பேன் என்றும், அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 2026 தேர்தலை நோக்கி விஜய் தனது திட்டங்களை வகுத்து வருகிறார்.
இதனால் கோட் படத்தின் ரிலீஸை தீபாவளிக்கு மாற்றலாம் என விஜய் முடிவு செய்துள்ளாராம். கோட் தீபாவளிக்கு ரிலீஸானால், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் கிடைக்கும் என்பதோடு, இந்தாண்டு முழுவதும் தனது வைப் இருக்கும் படி பார்த்துக்கொள்ளலாம் என விஜய் பிளான் செய்துள்ளாராம். ஜூன் மாதமே கோட் வெளியாகிவிட்டால், அடுத்து தளபதி 69 ரிலீசாகும் வரை பெரிய இடைவெளி இருக்கும் என்பதால் இந்த மாற்றமாம்.
இன்னொரு பக்கம் பவதாரிணி மறைவு காரணமாக கோட் படப்பிடிப்பு 2 வாரங்கள் வரை பிரேக் விடப்பட்டது. இப்படி ஷூட்டிங் தாமதம் ஆனதால் தான் கோட் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்துகொள்ளலாம் என படக்குழு முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது. எப்படி இருந்தாலும் தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம் ஜூன் மாதம் வெளியாகவில்லை என்பதே இப்போதைக்கு கோலிவுட்டில் இருந்து லேட்டஸ்ட் தகவலாக வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











