»   »  கருணாநிதி பக்கம் கடவுள்-ரஜினி

கருணாநிதி பக்கம் கடவுள்-ரஜினி

Subscribe to Oneindia Tamil
Rajini
கடவுளை பிடிக்காத சிலர் இருந்தாலும் அவர்கள் பக்கம் கடவுள் இருக்கிறார். முதல்வர் கருணாநிதிக்கும் கடவுளின் ஆசிர்வாதம் நிறையவே உள்ளது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த்தின் சிவாஜி பட வெள்ளி விழா சென்னையில் நடந்தது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா நினைவு மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் கேடயங்களை வழங்கினார்.

விழாவில் ரஜினியின் பேச்சும், முதல்வர் கருணாநிதியின் பேச்சும் ஹைலைட்டாக அமைந்தன.

ரஜினி பேசுகையில், சிவாஜி படத்தில், அரசியல் விஷயங்கள் இருக்கிறது என்று தெரிந்திருந்தும், அந்த படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் கருணாநிதிக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் என் நன்றியை கூறிக் கொள்கிறேன்.

இந்த பெருமைக்குரிய படத்தில் நான் இருந்தது, பாக்கியம். படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

சிவாஜி படம் பார்த்துவிட்டு என் குருநாதர் கே.பாலசந்தர் எப்படி இப்படி எல்லாம் நடித்தாய்? என்று கேட்டபோது, மூன்று முடிச்சு, அபூர்வ ராகங்கள், அவர்கள் ஆகிய படங்களில் நடித்தபோது, உங்களிடம் எப்படி நான் கேள்வி கேட்காமல் நடித்தேனோ, அதேபோல்தான் ஷங்கர் என்ன சொன்னாரோ, அதைத்தான் செய்தேன் என்றேன்.

ஷங்கர், ஏகலைவன் மாதிரி. அது, பூர்வஜென்ம புண்ணியம்.

அடுத்து, நாங்கள் இருவரும் சேர்ந்து செய்யப்போகிற படம், ரோபோ.' மிகப்பெரிய படம். இதுகுறித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன என்பதை நான் அறிவேன். சிவாஜியை விட ரோபோட் மிகப் பெரிய படமாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல பாலச்சந்தருக்காக ஒரு படம் செய்யவுள்ளேன். அதைத் தொடர்ந்து செளந்தர்யா இயக்கத்தில் சுல்தான் தி வாரியர் படத்தில் நடிக்கிறேன். இதையடுத்து ரோபோட் வெளி வரும்.

ரோபோட் குறித்து 2002லியே நாங்கள் விவாதித்தோம். ஆனால் அதற்கு முழு வடிவம் தர 5 ஆண்டுகள் ஆகி விட்டன.

நான் பலமுறை சாய்பாபாவை எனது வீட்டுக்கு அழைக்க முயற்சித்துள்ளேன். ஆனால் பெருந்தலைவர் காமராஜரைப் போல 'ஆகட்டும் பார்க்கலாம்' என்று அவர் கூறி விடுவார். அந்த விஷயத்தை நான் பிறகு மறந்து விடுவேன். ஆனால் கடந்த ஆண்டு கலைஞர் வீட்டுக்கு எந்தவித அழைப்பும் இல்லாம் சாய்பாபா போனார்.

நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். சில பேருக்கு கடவுளை பிடிக்காது. ஆனால், கடவுளுக்கு அவர்களை பிடிக்கும். கலைஞருக்கும் கடவுளின் ஆசிர்வாதம் உள்ளது.

கலைஞர் அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். கலையுலக விழாவாக இருந்தாலும் சரி, இலக்கிய விழாவாக இருந்தாலும் சரி, உங்களை தவிர யாரும் கண்ணுக்கு தெரியவில்லை. யாரும் கிடையாது. நீங்கள்தான் கலந்துகொள்ள வேண்டும். அதற்காக, உங்கள் உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் ரஜினி.

இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சுமன், விவேக், வி.எம்.சி.அனீபா, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, பேச்சாளர் ராஜா, கவிஞர்கள் பா.விஜய், நா.முத்துக்குமார், எழுத்தாளர் சுஜாதா, ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் ஆகியோரும் பேசினார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil