அஜித் ரசிகர்களை தாண்டி குட் பேட் அக்லி மக்களை கவருமா?.. மகன் சென்டிமென்ட் கங்குவா போல மாறிடாதே?
சென்னை: அருண்குமார் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு பொதுமக்களை கவரவில்லை என்கிற கருத்து நிலவி வருகிறது. பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தை பார்க்க குடும்பத்துடன் கிளம்பிய ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வீர தீர சூரன் படத்தை பார்க்க செல்லவில்லை என்பது தான் பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தில் இருந்து தெரிய வருகிறது.
நேற்று இரவு அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்துக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்ட நிலையிலும், இன்னமும் பல தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் ஆகாமல் டிக்கெட்டுகள் தாராளமாக கிடைக்கும் நிலை தான் உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 9 மணிக்கு ஷோ தொடங்குவதாக டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்ட நிலையிலும், பச்சை நிறமே அதிகம் காணப்படுகிறது.

குட் பேட் அக்லி படத்தின் டிரைலரை பார்த்த மக்கள் அப்படியே மார்க் ஆண்டனி மாதிரியே இருப்பதாகவும், புதிதாக இந்த படம் இருக்குமா? என்கிற சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர். மேலும், மகன் சென்டிமென்ட் தான் மையக் கருவாக இருந்தால் கங்குவா படம் போல மாறிவிடப் போகிறது என்கிற அச்சமும் எழத்தான் செய்கிறது.
அஜித் ரசிகர்களுக்கு அன்லிமிடட் பிரியாணி: அஜித் குமாரை பல வருடங்களாக ரசிகர்கள் எப்படி பார்க்க விரும்புகிறார்களோ அந்த அளவுக்கு அவரை மங்காத்தா படத்துக்கு பிறகு செம மாஸாக காட்டவும் தீனா, அமர்க்களம், பில்லா, மங்காத்தா என அஜித் படங்களின் ரெஃபரன்ஸ்களை அடுக்கி அஜித் குமார் பர்த்டே மாஷப் மாதிரியே ஒரு படத்தை கிண்டி வைத்திருக்கிறார் என தெரிகிறது. கண்டிப்பாக தியேட்டர்களில் அஜித் ரசிகர்களுக்கு அன்லிமிடட் பிரியாணியை ஆதிக் ரவிச்சந்திரன் பரிமாறுவார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
மகன் சென்டிமென்ட் வொர்க்கவுட் ஆகுமா?: மங்காத்தா படத்தில் அஜித்துக்கு எந்தவொரு சென்டிமென்ட்டும் இல்லாமல் முழுக்க முழுக்க நெகட்டிவ் ஷேடில் பொளந்துக் கட்டியிருப்பார். விஸ்வாசம் படத்தில் மகள் பாசத்தில் எமோஷனலை ஒவ்வொரு சீனிலும் உருக்கிக் கொட்டி ரசிகர்களை உருகவைத்து வெற்றிக் கண்டார். ஆனால், மகன் சென்டிமென்ட் காட்சிகள் இந்த படத்தில் எந்தளவுக்கு வொர்க்கவுட் ஆகிறதோ அதை பொறுத்துதான் பாக்ஸ் ஆபீஸ் மிகப்பெரிய அளவில் குவியும் என்கின்றனர்.

கங்குவா கதி: சிறுத்தை சிவாவும் கங்குவா படத்தில் பீரியட் போர்ஷனில் வரும் எமோஷனல் காட்சிகள் ரசிகர்களை கட்டிப்போடும் என படம் வெளியாவதற்கு முன்பாக பெரிதும் நம்பினார். ஆனால், படம் வெளியான பின்னர், அந்த சிறுவனுக்கும் சூர்யாவுக்கும் இடையேயான எமோஷனல் காட்சிகள் கொஞ்சம் கூட ஒட்டாத நிலையில் தான் படம் இந்த அளவுக்கு படுதோல்வியை சந்தித்தது. அதுபோன்ற நிலை அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்துக்கு வராமல் இருக்க வேண்டும் என ரசிகர்களே வேண்டி வருகின்றனர்.
பாக்ஸ் ஆபீஸ் வசூல் எப்படி இருக்கும்?: லியோ மற்றும் ஜெயிலருக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பெரிதாக தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்க்கும் ஆர்வத்தையே காட்டுவதில்லை என சில ரிப்போர்ட்டுகள் கூறுகின்றன. விஜய் நடித்த கோட் படம் கூட 450 கோடி தான் வசூல் செய்தது. ஜெயிலர் படத்துக்கு பிறகு ரஜினிகாந்தின் வேட்டையன் படமும் வசூல் சாதனை படைக்கவில்லை. இந்நிலையில், அஜித் ரசிகர்களை கடந்து அனைத்து ரசிகர்களையும் குட் பேட் அக்லி கவர்ந்தால் மட்டுமே 200 முதல் 300 கோடி வரை வசூல் சாத்தியம் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











