என் 21 ஆண்டு சினிமா வளர்ச்சி பற்றித்தான் 'குருஜி' மோடி பேசினார்: விஜய்
கோவை: குருஜி நரேந்திர மோடியுடன் நான் அரசியல் பேசவில்லை. என்னுடைய 21 ஆண்டுகால சினிமா வளர்ச்சி பற்றித்தான் அவர் பேசிக் கொண்டிருந்தார் என்று நடிகர் விஜய் தெரிவித்தார்.
கோவையில் நேற்று மாலை பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார் விஜய். இதற்காக அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை சென்றிருந்தார்.
ஆனால் இந்த சந்திப்புக்கு தான் முயற்சிக்கவில்லை என்றும், மோடிதான் தன்னைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்ததாகவும் விஜய் விளக்கம் அளித்திருந்தார்.

குருஜி மோடி
மோடியுடனான சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விஜய், "ரொம்ப சாதாரண ஆளான என்னையும் மதித்து குருஜி நரேந்திர மோடி என்னை சந்தித்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சென்ற முறை அவர் சென்னைக்கு வந்தபோது என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தமையால் என்னால் அவரை சந்திக்க முடியவில்லை.

வாங்க சந்திக்கலாம்
மீண்டும் கோயம்புத்தூர் வருகை தரும்போது என்னை சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தார். எனவே கோயம்புத்தூரில் வைத்து இன்று நான் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.

மரியாதைக்குரிய தலைவர்
இந்த சந்திப்பில் எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது. இந்திய நாட்டின் மரியாதைக்குரிய தலைவர் என்னை சந்திக்க வேண்டும் என கேட்டதே எனக்கு பெருமைக்குரிய விஷயமாகும். அவரை சந்தித்தபோது என்னிடம் அன்போடும், எளிமையாகவும் பேசினார்.

என் 21 ஆண்டு சினிமா பத்தி பேசினார்
அவர் என்னிடம் என்னுடைய 21 ஆண்டு சினிமா வளர்ச்சியையும், அது சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களையும் பேசினார். நாட்டின் முக்கிய தலைவர் என்னை பற்றி இந்தளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார் என நினைக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது.

அரசியல் பேசவில்லை
நாங்கள் எந்த அரசியல் நோக்கத்தோடும் சந்திக்கவில்லை. அரசியல் பற்றி எதுவும் பேசிக்கொள்ளவும் இல்லை," என்றார்.


Click it and Unblock the Notifications











